ஆந்திராவில் இருந்து தமிழகத்துக்கு கடத்திவரப்பட்ட ரூ1 கோடி எரிசாராயம் பறிமுதல்: ஆரணியில் நள்ளிரவு பரபரப்பு

தமிழ் முரசு  தமிழ் முரசு
ஆந்திராவில் இருந்து தமிழகத்துக்கு கடத்திவரப்பட்ட ரூ1 கோடி எரிசாராயம் பறிமுதல்: ஆரணியில் நள்ளிரவு பரபரப்பு

ஆரணி: ஆந்திராவில் இருந்து தமிழகத்துக்கு கடத்திவரப்பட்ட ஒரு கோடி ரூபாய் மதிப்பு எரிசாராயம் பறிமுதல் செய்யப்பட்டது. திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த நெசவு கிராமத்தில் நேற்று நள்ளிரவு 1 மணியளவில் டேங்கர் லாரியில் இருந்து, சரக்கு லாரியில் கொண்டு வந்த 500 கேன்களில் எரிசாரயம் நிரப்பி கொண்டிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். அப்போது கேனில் எரிசாராயம் நிரப்பிக்கொண்டிருந்த 4 பேர் ஓட்டம் பிடித்தனர்.

போலீசார் அவர்களை விரட்டி சென்று பிடிக்க முயன்றபோது 4பேரும் தப்பியோடிவிட்டனர். இதையடுத்து போலீசார் டேங்கர் லாரியை சோதனையிட்டதில் 25 ஆயிரம் லிட்டர் எரிசாராயத்தை 500 கேன்களில் நிரப்பி, அதை லாரியில் கடத்த முயன்றது தெரிய வந்தது.

பின்னர் டேங்கர் லாரி, சரக்கு லாரி, 4 பைக்குகள் மற்றும் எரிசாராயம் நிரப்பப்பட்ட கேன்களை பறிமுதல் செய்தனர். இவற்றின் மதிப்பு ரூ. 1 கோடி இருக்கும் என போலீசார் தெரிவித்தனர்.

இதுகுறித்து அறிந்ததும் மதுவிலக்கு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

பின்னர் பறிமுதல் செய்யப்பட்ட ஏரிசாராயம், டேங்கர் லாரி, சரக்கு லாரி மற்றும் 4 பைக்குகள், போளூர் மதுவிலக்கு போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

ஆந்திர மாநிலத்தில் இருந்து ேவலூர், ஆற்காடு மற்றும் ஆரணி வழியாக செஞ்சி பகுதிக்கு எரிசாராயம் கொண்டு செல்ல முயன்றது தெரியவந்தது. செக்போஸ்ட்டில் சிக்காமல் இருக்க இந்த வழியாக எரிசாராயத்தை கடத்தல் கும்பல் நீண்ட நாட்களாக பயன்படுத்தி வந்துள்ளது.

போலீசாரிடம் சிக்காமல் இருக்க டேங்கர் லாரியில் கொண்டுவரப்படும் எரிசாராயத்தை கேன்களில் நிரப்ப ஒரே இடத்தை பயன்படுத்தாமல், அடிக்கடி வெவ்வேறு இடத்தை மாற்றி வந்துள்ளனர்.

நேற்றிரவு செஞ்சி, சேத்துப்பட்டு பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருப்பதாக கடத்தல் கும்பலுக்கு ரகசியல் தகவல் கிடைத்துள்ளது. அதனால் ஆரணி அடுத்த நெசவு கிராமத்தில் உள்ள மறைவான இடத்தில் டேங்கர் லாரியில் இருந்து எரிசாராயத்தை கேன்களில் நிரப்பி சரக்கு லாரியில் கடத்தி செல்ல முயன்றது தெரியவந்தது.

தப்பி சென்ற 4 பேரை தேடி வருகின்றனர். எரிசாராயம் கடத்தலில் தொடர்புடைய முக்கிய நபர்கள் குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருவண்ணாமலை, ஆரணி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் எரிசாராயம் விற்பனை அதிகளவு நடைபெற்று வருகிறது. தற்போது ஆரணியில் டேங்கர் லாரியில் எரிசாராயம் சிக்கியதால் இந்த கும்பலுக்கும், மாவட்டத்தில் எரிசாராயம் விற்கும் கும்பலுக்கும் தொடர்பு உள்ளதா, இதில் தொடர்புள்ள முக்கிய புள்ளிகள் யார் என போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் டேங்கர் லாரியில் கர்நாடக பதிவெண் இருந்தது.

எனவே ஆந்திரா மற்றும் கர்நாடக மாநிலத்தில் இருந்து எரிசாராயம் கடத்தி வரப்பட்டதா என்ற கோணத்திலும் விசாரித்து வருகின்றனர்.

.

மூலக்கதை