கஞ்சிக்கோட்டில் அட்டகாசம் செய்த 3 காட்டு யானைகள் விரட்டியடிப்பு: ஆற்றில் உற்சாக குளியல்

தமிழ் முரசு  தமிழ் முரசு
கஞ்சிக்கோட்டில் அட்டகாசம் செய்த 3 காட்டு யானைகள் விரட்டியடிப்பு: ஆற்றில் உற்சாக குளியல்

பாலக்காடு: கோவை அருகே வாளையாரை அடுத்த கஞ்சிக்கோடு பகுதியில், கடந்த 2 நாட்களாக அட்டகாசம் செய்த 3 யானைகள், காட்டுக்குள் விரட்டியடிக்கப்பட்டது. காட்டு யானைகளுக்கு தேவையான உணவுவகைகள், மலையோர கிராமத்தோட்டங்களில் அதிகளவு கிடைப்பதால் யானைகள் காட்டை விட்டு வெளியேறி ஊருக்குள் புகுந்து மக்களை அச்சுறுத்தி வருகின்றன.

கோவை அருகே வாளையார், கஞ்சிக்கோடு காட்டில் இருந்து வெளியேறிய 3 யானைகள் கஞ்சிக்கோடு, மருதுரோடு, கல்லேப்பிள்ளி, வட்டப்பாறை, மலம்புழா, கொட்டேக்காடு வழியாக வந்து சாலைகளை கடந்து ஊருக்குள் புகுந்து, பயிர்களை சேதப்படுத்தின. இதனால் தொழிலாளர்களும், பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்களும் வீட்டைவிட்டு வெளியே வரமுடியாமல் தவித்தனர்.

இந்த நிலையில் வாளையார் வனத்துறையினர் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் ஊருக்குள் புகுந்த காட்டு யானைகளை பட்டாசுகள் வெடித்தும், டிரம்ப்ஸ் அடித்தும் விரட்டினர்.

விரட்டப்பட்ட 3 யானைகள் கஞ்சிக்கோடு அருகே கொட்டேக்காடு ஆற்றில் குளியல்போட்டு, நீந்தி விளையாடியபடி வனப்பகுதிக்குள் புகுந்தது. காட்டுக்குள் சென்ற யானைகள் எந்த நேரத்திலும் மீண்டும் ஊருக்குள் வரலாம்.

அதனால் பொதுமக்கள் ஜாக்கிரதையாக செயல்படும்படி வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர். காட்டு யானைகள் ஊருக்குள் நுழைவதை தடுக்க புதுச்சேரி முதல் வாளையார் வரை 11 கி. மீ.

தூரத்திற்கு மின்சார கம்பிவேலி அமைக்கப்படவுள்ளது. காட்டிற்குள் தண்ணீர் தொட்டிகள் அமைக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

சில இடங்களில் அகழிகள் வெட்டவும் முடிவெடுக்கப்பட்டு உள்ளது.

ஒற்றை யானை மிரட்டல்

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட சிறுவாட்டுகாடு பகுதியில் நேற்று முதல் ஒற்றை யானை சாலையில் நின்று கொண்டு பொதுமக்களை அச்சுறுத்தி வருகிறது.

ஒட்டன்சத்திரத்தில் இருந்து இரவு நேரத்தில் உணவுப் பொருட்களை வாங்கிச் சென்ற பெத்தேல்புரம், வடகாடு பகுதி பொதுமக்களை சாலையில் வழிமறித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

.

மூலக்கதை