இந்தி திணிப்பை எதிர்த்து அக்டோபரில் போராட்டம்: புதுச்சேரி முதல்வர் அறிவிப்பு

தமிழ் முரசு  தமிழ் முரசு
இந்தி திணிப்பை எதிர்த்து அக்டோபரில் போராட்டம்: புதுச்சேரி முதல்வர் அறிவிப்பு

புதுச்சேரி: புதுச்சேரி காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் 100 அடி சாலையில் உள்ள தனியார் ஓட்டலில் நேற்று நடந்தது. இதற்கு மாநில தலைவரும், அமைச்சருமான நமச்சிவாயம் தலைமை தாங்கினார்.

முதல்வர் நாராயணசாமி, அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர் முகுல் வாஸ்னிக், அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் சஞ்சய்தத், அமைச்சர் ஷாஜகான் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதில் காங்கிரஸ் மேலிட பார்வையாளர் முகுல் வாஸ்னிக் பேசும்போது, ‘’இந்தி, இந்துத்துவாவுக்கு பாஜக அதிமுக்கியத்துவம் கொடுக்கிறது.

இந்தியா அமைதியான நாடு, பல்வேறு மொழிகள் பேசக்கூடிய மக்கள் இருக்கிறார்கள். மத்திய பாஜ அரசு இந்தி ஒரேமொழி கொள்கையை கொண்டு வந்து திணிக்கின்றனர்.



இதனை ஏற்க முடியாது. ஒரே மொழி கொள்கையை திணிப்பது இந்திய இறையான்மைக்கு எதிரானது.

காங்கிரஸ் பூத் கமிட்டியை பலப்படுத்த வேண்டும். ஆலோசனை கூட்டங்கள் நடத்தி உறுப்பினர்கள் சேர்க்கையை தீவிரப்படுத்த வேண்டும்.

2021-ம் ஆண்டில் சட்டசபை தேர்தலை சந்திக்க உள்ளோம். அதில் நாம் நிச்சயம் வெற்றிபெற கட்சியை பலப்படுத்த வேண்டும்’’ என்றார்.

புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி பேசியதாவது:
ராஜிவ் காந்தியின் வைரவிழா, காந்தியின் 150-வது பிறந்த நாள் விழாவை அனைத்து மாநிலங்களிலும் சிறப்பாக கொண்டாட சோனியா உத்தரவிட்டுள்ளார். பிரதமர் மோடி தலைமையிலான அரசில் பொருளாதார வீழ்ச்சி பெரிய அளவில் ஏற்பட்டிருக்கிறது.



ஆட்டோமொபைல் நிறுவனங்கள் மூடப்பட்டு, நிறைய தொழிலாளர்கள் வேலை இழக்கின்றனர். 2008ம் ஆண்டு பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டபோது, மன்மோகன்சிங், அதனை திறம்பட கையாண்டார்.

தற்போது பொருளாதாரம் வீழ்ச்சி அடையும்போது மன்மோகன் சிங், நிர்மலா சீத்தாராமனிடம் சில கோரிக்கை விடுத்தும் அவர் எதையும் கேட்கவில்லை. இந்தி திணிப்பை கொண்டுவர துடிக்கின்றனர்.

இதை எதிர்த்து அக்டோபர் 15 முதல் 25ம்தேதிக்குள் போராட்டம் நடத்தப்படும்.

இவ்வாறு பேசினார்.

.

மூலக்கதை