மதுராந்தகத்தில் இன்று ரோந்து வாகனத்தின் டயர் வெடித்தது: 3 காவலர்கள் படுகாயம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
மதுராந்தகத்தில் இன்று ரோந்து வாகனத்தின் டயர் வெடித்தது: 3 காவலர்கள் படுகாயம்

மதுராந்தகம்: மதுராந்தகத்தில் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் இன்று காலை ரோந்து பணியில் ஈடுபட்ட போலீசாரின் கார் டயர் வெடித்து விபத்துக்கு உள்ளாகியது. இதில் 3 காவலர்கள் படுகாயம் அடைந்தனர்.

மதுராந்தகத்தில் இன்று அதிகாலை திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலை வழியாக போலீசாரின் ஒரு ரோந்து வாகனம் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தது. இந்த ரோந்து காரில் சிறப்பு உதவி ஆய்வாளர் கணேசன் (42), தலைமை காவலர் தினகரன் (35), காவலர் முத்துக்குமரன் (30) ஆகியோர் இருந்தனர்.

காரை முத்துகுமரன் ஓட்டி சென்றார். இந்த கார் மதுராந்தகம் அடுத்த கருங்குழி அருகே செல்லும்போது, முன்பக்க டயர் திடீரென வெடித்தது.

இதில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார், தேசிய நெடுஞ்சாலையின் சென்டர் மீடியன் தடுப்பு சுவரில் மோதி கவிழ்ந்தது.

இவ்விபத்தில் காருக்குள் இருந்த 3 காவலர்களும் படுகாயம் அடைந்தனர்.

இதுகுறித்து தகவலறிந்ததும் மதுராந்தகம் போலீசார் விரைந்து வந்தனர். அங்கு படுகாயம் அடைந்த 3 பேரையும் மீட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்த ரோந்து கார் கடந்த 10 ஆண்டுகளாக எவ்வித முறையான பராமரிப்பின்றி செயல்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இதேபோல் காஞ்சிபுரம் மாவட்டத்தின் பல்வேறு காவல் நிலையங்களில் முறையான பராமரிப்பின்றி ரோந்து மற்றும் போலீசாரின் வாகனங்கள் இயங்கி வருவதாகவும் சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவித்தனர்.

.

மூலக்கதை