மகாராஷ்டிரா, அரியானா, ஜார்க்கண்ட் சட்டப் பேரவைக்கு தேர்தல் அட்டவணை நாளை வெளியீடு?

தமிழ் முரசு  தமிழ் முரசு
மகாராஷ்டிரா, அரியானா, ஜார்க்கண்ட் சட்டப் பேரவைக்கு தேர்தல் அட்டவணை நாளை வெளியீடு?

புதுடெல்லி: மகாராஷ்டிரா, அரியானா மற்றும் ஜார்க்கண்ட் மாநில சட்டமன்றத் தேர்தலுக்கான அட்டவணையை தேர்தல் ஆணையம், நாளை (செப். 19) அறிவிக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

3 மாநிலங்களிலும் பாஜ தலைமையிலான ஆட்சி நடப்பதால், அங்கு அக்கட்சியின் ஆட்சியை வீழ்த்த காங்கிரஸ் பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறது. நாடாளுமன்ற தேர்தல் முடிந்த பின்னர், முதன்முதலாக அரியான, மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் மாநில சட்டசபை தேர்தல் விரைவில் நடக்கவுள்ளது.

அரியானா மாநில சட்டமன்றத்தின் பதவிக்காலம் வரும் நவம்பர் 2ம் தேதியுடன் முடிவடைகிறது. அதே வேளையில், மகாராஷ்டிரா சட்டமன்றத்தின் பதவிக்காலம் நவம்பர் 9ம் தேதியுடன் முடிவடைகிறது.

ஜார்க்கண்ட் சட்டமன்றத்தின் பதவிக்காலம் டிசம்பர் 27ம் தேதியுடன் முடிவடைய உள்ளது. தற்போது 3 மாநிலங்களிலும் பாஜ ஆட்சி நடக்கிறது.



மேற்கண்ட மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடத்துவதற்கு வசதியாக, தேர்தல் ஆணையத்தின் மூன்று பேர் கொண்ட அதிகாரிகள் குழு நேற்று முன்தினம் மும்பைக்கு சென்று சம்பந்தப்பட்ட அரசியல் கட்சிகள், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியது. இக் குழு அளிக்கும் பரிந்துரையின் அடிப்படையில் தேர்தல் கமிஷன் ஒப்புதல் அளித்தவுடன் தேதிகள் அறிவிக்கப்பட உள்ளன.

அதேபோல், அரியானா, ஜார்க்கண்ட் மாநிலங்களில் தேர்தல் நடத்துவதற்கான ஏற்பாடுகள் கடைசி கட்டத்தை எட்டி உள்ளன. கடந்த 2014ம் ஆண்டில், மகாராஷ்டிரா மற்றும் அரியானாவுக்கான தேர்தல் அட்டவணை செப்.

20ம் தேதியன்று அறிவிக்கப்பட்டது. இரு மாநிலங்களிலும் வாக்குப்பதிவு அக்டோபர் 15ம் தேதி ஒரே கட்டத்தில் நடந்தது.

அக். 19ம் தேதி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டன.



அக். 27ம் தேதி கொண்டாடப்படும் தீபாவளிக்கு முன்னதாக, மகாராஷ்டிரா மற்றும் அரியானா தேர்தல்களின் முடிவுகள் வெளியிடப்பட்டு, எந்த கட்சி ஆட்சியை அமைக்கும் என்பது தெரிந்துவிடும்.

ஜார்க்கண்ட் மாநிலத்தை பொருத்தவரை, நவம்பர் 25 முதல் டிசம்பர் 20 வரை ஐந்து கட்ட தேர்தல்களை தேர்தல் ஆணையம் 2014ல் அறிவித்தது. முடிவுகள் டிசம்பர் 23 அன்று அறிவிக்கப்பட்டன.

இதுதொடர்பாக தேர்தல் ஆணையம் இன்னும் தேதிகளை அறிவிக்கவில்லை என்றாலும், மேற்கண்ட மூன்று மாநிலங்களிலும் தேர்தல் பிரசாரத்தை அரசியல் கட்சிகள் துவங்கிவிட்டன. அரியானாவில், 90 உறுப்பினர்களைக் கொண்ட சபையில் அதிகாரத்தை மீண்டும் கைப்பற்ற, எம்எல்ஏக்களின் எண்ணிக்கையை 47 முதல் 75 ஆக உயர்த்த பாஜ இலக்கு வைத்துள்ளது.

மகாராஷ்டிராவில், ஆளும் பாஜ மற்றும் சிவசேனா கூட்டணி ஆட்சி இருப்பினும், இரு கட்சிகளும் இடையே கூட்டணி சீட் ஒப்பந்தம் இன்னும் முடிவாகவில்லை.

ஜார்க்கண்டில், ரகுபார் தாஸின் தலைமையில் பாஜ ஒரு வலுவான நிலையில் இருப்பதாகத் தெரிகிறது.

இங்கு 81 இடங்களில் 65 இடங்களை கைப்பற்ற அக்கட்சி இலக்கு நிர்ணயித்துள்ளது. மேற்கண்ட 3 மாநிலங்களிலும் பாஜ ஆட்சியை அப்புறப்படுத்த, காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி பேச்சுவார்த்தையும் நடக்கிறது.

இதற்காக, காங்கிரஸ் தரப்பில் புதிய நிர்வாகிகள் சிலர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மகாராஷ்டிராவில் காங்கிரஸ் - ேதசியவாத காங்கிரஸ் கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

நாளை தேர்தல் அட்டவணை வெளியாக வாய்ப்புள்ளதாக கூறப்பட்டாலும், தேர்தல் ஆணையம் தரப்பில் அதிகாரபூர்வ அறிவிப்பு ஏதுமில்லை.

இருந்தும், அரியானா மற்றும்  மகாராஷ்டிராவிற்கான தேதிகள் அறிவிக்கப்படலாம் என்றும், நக்சல் பாதிப்புள்ள ஜார்க்கண்டில் பல்வேறு கட்டங்களாக தேர்தல் நடத்துவது தொடர்பான அறிவிப்புகள் வெளியாகலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

.

மூலக்கதை