அரசு உதவி பெறும் பள்ளிகளில் புதிய ஆசிரியர்கள் நியமனத்துக்கு தடை: பள்ளிக்கல்வி துறை அரசாணை பிறப்பித்தது

தமிழ் முரசு  தமிழ் முரசு
அரசு உதவி பெறும் பள்ளிகளில் புதிய ஆசிரியர்கள் நியமனத்துக்கு தடை: பள்ளிக்கல்வி துறை அரசாணை பிறப்பித்தது

சென்னை: அரசு உதவி பெறும் பள்ளிகளில் புதிய பணி நியமனங்கள் செய்யக் கூடாது என்று பள்ளிக்கல்வித்துறை அதிரடியாக அரசாணை பிறப்பித்துள்ளது. உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தூத்துக்குடி, மதுரை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களை சேர்ந்த உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள் 8 பேர் பணி நியமன ஒப்புதல் கோரி வழக்கு தொடர்ந்தனர்.

இதையடுத்து, உபரி ஆசிரியர்கள் பணி நிரவல் குறித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை பிறப்பித்த இடைக்கால ஆணையினை செயல்படுத்துவது குறித்து பள்ளிக்கல்வி துறை புதிய அரசாணை பிறப்பித்துள்ளது.
அதன்படி, நிதியுதவி பெறும் தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி ஆகிய அனைத்து வகை பள்ளிகளிலும் பள்ளி வாரியாக பணியாளர் நியமனம் செய்யப்பட வேண்டும்.



தகுதியான காலிப்பணியிடத்திற்கு உபரியாக பணிபுரிந்து வரும் ஆசிரியர்களை பணிநிரவல் மூலம் நியமனம் செய்ய வேண்டும். உபரி ஆசிரியர்களின் பட்டியலை பதவி வாரியாக மாவட்ட அளவில் தொகுத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்தில் வைக்க வேண்டும்.

பிற உதவி பெறும் பள்ளியில் உள்ள ஆசிரியர்களை மாற்றுப்பணி மூலம் பணிபுரிய அனுமதிக்கலாம். இவ்வாறு மாற்றுப்பணி முடிக்கப்பட்ட பின்னர் மாவட்டத்திலுள்ள தேவைக்கு அதிகமான உபரி ஆசிரியர் பட்டியல் விவரங்களை சார்ந்த இயக்குனருக்கு சமர்ப்பிக்க வேண்டும்.

அனைத்து மேலாண்மையின் கீழ் இயங்கும் பள்ளிகளின் நிர்வாகிகளால் தங்களது பள்ளிகளுக்கு ஏற்பட்டுள்ள நிரப்ப தகுந்த காலிப்பணியிடங்களை நிரப்பும் முன்பு அந்த மாவட்டத்தில் கூடுதல் ஆசிரியர் யாரும் இல்லை என்பதை உறுதி செய்ய வேண்டும்.

உபரி ஆசிரியர்களை பணி நிரவல் செய்வதால் அரசுக்கு கூடுதல் செலவினம் ஏதும் ஏற்படக்கூடாது. மேலும், புதிய பணி நியமனங்கள் ஏதும் மேற்கொள்ளக்கூடாது என்று பள்ளிக்கல்வி துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதன் மூலம் அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் சிறுபான்மை கல்வி நிறுவனங்களில் இனி ஆசிரியர்கள் நியமனத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

.

மூலக்கதை