சுபஸ்ரீயின் குடும்பத்துக்கு ரூ5 லட்சம் வழங்கி ஆறுதல்: பேனர் கலாசாரத்துக்கு திமுக துணை நிற்காது ....மு.க.ஸ்டாலின் உறுதி

தமிழ் முரசு  தமிழ் முரசு
சுபஸ்ரீயின் குடும்பத்துக்கு ரூ5 லட்சம் வழங்கி ஆறுதல்: பேனர் கலாசாரத்துக்கு திமுக துணை நிற்காது ....மு.க.ஸ்டாலின் உறுதி

தாம்பரம்: பேனர் விழுந்து இறந்த சுபஸ்ரீயின் குடும்பத்துக்கு மு. க. ஸ்டாலின் நேரில் ெசன்று ஆறுதல் கூறினார். அவரது குடும்பத்துக்கு ரூ. 5 லட்சம் நிதியுதவி வழங்கினார்.

பேனர் விழுந்து இறந்த சுபஸ்ரீயின் வீட்டுக்கு இன்று காலை திமுக தலைவர் மு. க. ஸ்டாலின் நேரில் சென்று, அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். அவருடன் திமுக எம்பி டி. ஆர். பாலு, எம்எல்ஏக்கள் தா. மோ. அன்பரசன், இ. கருணாநிதி ஆகியோர் உடனிருந்தனர்.

இதையடுத்து மு. க. ஸ்டாலின் நிருபர்களிடம் கூறுகையில், கடந்த 2017-ம் ஆண்டு திமுகவின் செயல் தலைவராக நான் பொறுப்பேற்ற நேரத்தில், விளம்பர பேனர்களை திமுகவினர் வைக்க கூடாது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் காவல் துறையினரிடம் முறையான அனுமதி பெற்று வைக்க வேண்டும்.

அதையும் மீறி முறைகேடாக பேனர் வைப்பவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என வெளிப்படையாக அறிவித்திருந்தேன்.

சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு வழங்கியிருந்தாலும், பெயரளவுக்கு ஒன்றிரண்டு பேனர்களுக்கு மட்டும் ஆளுங்கட்சியினர் அனுமதி பெற்று, அப்பகுதிகளில் நூற்றுக்கணக்கான பேனர்களை வைத்து வருகின்றனர். தமிழக முதல்வராக இருந்தாலும் அமைச்சர்களாக இருந்தாலும் எந்த நிகழ்ச்சிக்கு வருவதாக இருந்தாலும், அவர்களது கட்சியினர் வழிநெடுகிலும் மக்களுக்கு இடையூறாக ராட்சத விளம்பர பேனர்களை வைத்து வருகின்றனர்.

இதுகுறித்து உயர்நீதிமன்றம் தொடர்ந்து கண்டனம் தெரிவித்து வருகிறது. உத்தரவை மீறி ஆளுங்கட்சியினர் பேனர்களை வைக்கின்றனர்.

ஏற்கனவே கோவை மாவட்டத்தில் ரகு என்ற சகோதரனை விளம்பர பேனர் பலி கொண்டது. இப்போது சுபஸ்ரீ பலியாகி இருப்பது வேதனையளிக்கிறது.

அவரை இழந்து வாடிக்கொண்டிருக்கிற அவரது பெற்றோரை சந்தித்து ஆறுதல் கூறியிருக்கிறேன். என்னதான் நாம் ஆறுதல் கூறினாலும், அவர்களின் மனது ஆறுதல் அடையாது என நன்றாக தெரியும்.

எனினும், முடிந்தவரை ஆறுதல்படுத்தி இருக்கிறோம்.

சுபஸ்ரீயின் தந்தை ரவி என்னிடம் கூறுகையில், ‘இந்த பேனர் கலாசாரத்தால் எனது மகள் சுபஸ்ரீ இறந்திருப்பது இதுவே கடைசியாக இருக்கட்டும்.

இதுபோன்று மீண்டும் ஒரு சம்பவம் நடைபெறக்கூடாது. இதற்கு ஒரு முற்றுப்புள்ளி அமைக்க வேண்டும்’ என உணர்ச்சியுடன் வலியுறுத்தியதை மறக்க முடியாது.

நேற்று முன்தினம்கூட சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக சார்பில் நாங்களே முன்சென்று மனு தாக்கல் செய்துள்ளோம். திமுகவின் சார்பில் நாங்கள் சட்டத்தை மீறி அனுமதியின்றி எங்கும் விளம்பர பேனர் அமைக்க மாட்டோம் என உறுதி கூறியிருக்கிறோம்.

நிகழ்ச்சி நடைபெறும் இடத்தில், அடையாளத்துக்கு ஒரேயொரு பேனரை மட்டும் வைத்து நிகழ்ச்சிகள் நடைபெற வேண்டும்.

அதை மீறி கட்சியினர் யாராவது பேனர் வைத்தால், நாங்களே அதற்குரிய நடவடிக்கை எடுப்போம்.

அப்படி யார் வைத்தார்களோ, அவர்கள்மீது திமுக தலைமை உறுதியான நடவடிக்கை எடுக்கும். பேனர் கலாசாரமே இருக்கக்கூடாது என்பதுதான் எனது கருத்து.

சுபஸ்ரீயின் இழந்து வாடும் குடும்பத்தாருக்கு திமுக அறக்கட்டளை சார்பில் ரூ5 லட்சம் உதவி தொகை வழங்கியிருக்கிறோம். அவர்களுக்கு திமுக என்றும் துணைநிற்கும்.

இவ்விபத்து குறித்து அரசு நினைத்தால், சம்பந்தப்பட்டவரை அடுத்த விநாடியே கைது செய்யலாம். ஆனால், அவர்கள் ஒரு நாடகத்தை நடத்தி கொண்டிருக்கின்றனர் என்பதுதான் உண்மை.

இதை நான் அரசியலாக்க விரும்பவில்லை.

.

மூலக்கதை