அரசியலில் எப்போதும் நுழைய மாட்டேன் - சுதீப்

தினமலர்  தினமலர்
அரசியலில் எப்போதும் நுழைய மாட்டேன்  சுதீப்

இந்தியாவில் உள்ள நடிகர், நடிகைகளில் பலருக்கும் அரசியல் ஆசை இருக்கிறது. சிலருக்குதான் அரசியல் வெற்றிகரமாக அமைந்துள்ளது, பலருக்கு தோல்வியில் முடிந்துள்ளது.

தமிழ்நாட்டில் தங்களையும் எம்ஜிஆர் போல நினைத்துக் கொண்டு பலர் அரசியல் கனவுகளில் இருக்கிறார்கள். கமல்ஹாசன் அரசியலுக்குள் வந்துவிட்டார். ரஜினிகாந்த், விஜய் எதிர்காலத்தில் வருவார்கள் என்று யூகங்கள் உள்ளன.

இதனிடையே, நடிகர் சிரஞ்சீவி அவருடைய அரசியலால் தனது பத்து வருட சினிமா உலக வாழ்க்கையிலிருந்து விலகிவிட்டார் என 'நான் ஈ' நடிகர் சுதீப் தெரிவித்துள்ளார். சிரஞ்சீவியுடன் இணைந்து 'சைரா' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் அவர் நடித்துள்ளார்.

ஹைதராபாத்தில் பத்திரிகையாளர்களைச் சந்தித்த சுதீப்பிடம் சிரஞ்சீவியிடம் இருந்து என்ன கற்றுக் கொண்டீர்கள் எனக் கேட்டதற்கு, “அரசியலில் எப்போதும் நுழையக் கூடாது' என்று கற்றுக் கொண்டேன் என்று பதிலளித்துள்ளார்.

நடிகர் சிரஞ்சீவி 'பிரஜா ராஜ்ஜியம்' என்ற சொந்தக் கட்சி ஆரம்பித்து எம்எல்ஏ ஆகி பின் தன் கட்சியை காங்கிரசுடன் இணைத்தார். அடுத்து ராஜ்ய சபா எம்பி ஆகி சுற்றுலாத் துறை மந்திரியாக பதவி வகித்து பின்னர் அரசியலை விட்டே விலகினார்.

2017ல் 'கைதி நம்பர் 1' படம் மூலம் மீண்டும் நடிக்க வந்து அடுத்து 'சைரா' படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் அக்டோபர் 2ம் தேதி வெளியாக உள்ளது.

மூலக்கதை