கருணை உள்ளம் கொண்ட கவாஸ்கர் | செப்டம்பர் 17, 2019

தினமலர்  தினமலர்
கருணை உள்ளம் கொண்ட கவாஸ்கர் | செப்டம்பர் 17, 2019

புதுடில்லி: அமெரிக்க பயணத்தின் மூலம் 600 ஏழைக்குழந்தைகளின் இருதய ‘ஆப்பரேஷனுக்கு’ தேவையான நிதியை திரட்டியுள்ளார் கவாஸ்கர்.

மகாராஷ்டிரா, சட்டீஸ்கர், ஹரியானா மாநிலங்களில் சத்ய சாய் சஞ்சீவனி மருத்துவமனை செயல்படுகிறது. இங்கு, இருதய நோயால் பாதிக்கப்பட்டுள்ள ஏழை குழந்தைகளுக்கு இலவச ‘ஆப்பரேஷன்’ செய்யப்படுகிறது. கடந்த 2012 முதல் தற்போது வரை எவ்வித கட்டணமும் இல்லாமல் 10 ஆயிரம் ‘ஆப்பரேஷன்’ செய்யப்பட்டுள்ளது. இன்னும் 36 ஆயிரம் குழந்தைகள் சிகிச்சைக்காக காத்திருக்கின்றனர். இதற்கு ‘ஹார்ட் டூ ஹார்ட்’ என்ற அறக்கட்டளை நிதி திரட்டி உதவுகிறது,

இதற்காக தனது பங்களிப்பு அளிப்பதற்காக, இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் கவாஸ்கர், அமெரிக்காவுக்கு சென்றார். நியூஜெர்சி, கலிபோர்னியா உள்ளிட்ட பகுதிகளில் சென்று மக்களிடம் நிதி கேட்டார். இப்பயணத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப்பையும் சந்தித்தார். உதவி செய்த நபர்களுக்கு, கிரிக்கெட் பேட்டில் தனது கையெழுத்திட்டு அளித்தார். தற்போது, 600 குழந்தைகள் ‘ஆப்பரேஷன்’ செய்ய தேவையான நிதியுடன் நாடு திரும்பி உள்ளார். இதில் தனது சொந்தப்பணத்திலிருந்து 34 ‘ஆப்பரேஷனுக்கு’ தேவையான நிதியை தந்துள்ளார். கடந்த ஆறு மாதங்களில் மட்டும் ‘ஹார்ட் டூ ஹார்ட்’ அறக்கட்டளை வழியாக, 400 ‘ஆப்பரேஷன்’ செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து கவாஸ்கர் கூறுகையில்,‘ ஏழைக்குழந்தைகளின் இருதய ‘ஆப்பரேஷனுக்காக’ நிதி திரட்ட அமெரிக்கா சென்றேன். நிதி அளித்த அனைவருக்கும் நன்றி,’’ என்றார்.

மூலக்கதை