தப்புமா? டெங்குவிடம் இருந்து தூங்கா நகர் ... என்ன செய்யலாம்; என்ன கூடாது

தினமலர்  தினமலர்
தப்புமா? டெங்குவிடம் இருந்து தூங்கா நகர் ... என்ன செய்யலாம்; என்ன கூடாது

மதுரை : மழைக்காலம் என்றால் எல்லோருக்கும் மகிழ்ச்சி தான். இக்காலத்தில் உடலை கவனிக்க தவறினால் அவ்வளவுதான். இது புதிய, புதிய நோய்கள் பரவும் காலம்.

சில ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தில் கொத்து, கொத்தாய் உயிர்களை காவு வாங்கிய டெங்கு காய்ச்சலுக்கு இது மிகவும் உகந்த கால கட்டம். இக்காய்ச்சலை பரப்பும் கொசு 'ஏடிஸ்'. நன்னீரில் மட்டுமே வசிக்கும். பல்கி பெருகும். மதுரையிலும் கடந்த ஆண்டுகளில் டெங்கு மிரட்டியுள்ளது. இப்போதும் அங்கொன்றும் இங்கொன்றுமாய் காய்ச்சல் பரவத்துவங்கி உள்ளது. டெங்கு காய்ச்சலா இருக்குமோ... என்ற அச்சம் மக்களிடம் தொற்றியுள்ளது.

இதை கருத்தில் கொண்டு மாநகராட்சி நிர்வாகம் டெங்கு கொசு ஒழிப்பு பணியில் களம் இறங்கியது. வீடு, வீடாக சென்று கொசு ஒழிப்பு பணி மேற்கொள்ள வார்டுக்கு 4 ஊழியர்கள் வீதம் 400 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். முன்னெச்சரிக்கையாக மக்கள் அதிகம் கூடும் இடங்களில் நிலவேம்பு கசாயம் வழங்க வேண்டும். அதிகாரிகளின் நடவடிக்கைக்கு மக்களும் ஒத்துழைக்க வேண்டும். அப்போது தான் தொல்லை தரும் டெங்கு, துாங்கா நகரை தீண்டாது.

'டெங்கு'வை விரட்டும் கொசுவர்த்தி


டெங்குவை விரட்டும் பிரத்யேக கொசுவர்த்தியை மதுரை ஆத்திகுளம் கே.வி.ஆர்.நகர் மத்திய பூச்சியியல் ஆராய்ச்சி மைய முன்னாள் தொழில்நுட்ப ஆய்வாளர் பாஸ்கரன் கண்டுபிடித்துள்ளார். இதை எளிதாக வீடுகளில் செய்யலாம். அவர் கூறியதாவது: சிட்ரோநெல்லா, யூகலிப்டஸ், தேங்காய் எண்ணெய், வேப்ப எண்ணெய் ஆகியவை தான் தேவைப்படும் முக்கிய பொருட்கள். இந்த 4 வகை எண்ணெயையும் தேவையான தண்ணீர் சேர்த்து ஜிக்கட் மற்றும் மரத்துாளுடன் கலந்து ஊதுபத்தி வடிவில் தயாரிக்க வேண்டும்.

நான்கு நாட்கள் வீட்டிலேயே காய வைத்து பயன்படுத்தலாம். இக்கொசுவர்த்தியில் இருந்து வெளியேறும் புகை டெங்கு கொசுக்களை மட்டுமின்றி அனைத்து வகை கொசுக்களையும் விரட்டும். இதை பயன்படுத்தும் போது வீட்டின் கதவு, ஜன்னல்களை திறந்து வைத்திருக்க வேண்டும். காலை, மதியம் தலா ஒரு வர்த்தியை கொளுத்தலாம். வெளியேறும் புகையால் பக்க விளைவு ஏற்படாது. தேவையான மூலப்பொருட்கள் எளிதில் கடைகளில் கிடைக்கும், என்றார்.

தொடர்புக்கு: 86374 83948தேவையான பொருட்கள்மரத்துாள்- 100 கிராம்ஜிக்கட் துாள்-15 கிராம்தண்ணீர்- 230 மில்லிசிட்ரோநெல்லா எண்ணெய்- 1 மில்லியூகலிப்டஸ் எண்ணெய்- 1 மில்லிவேப்ப எண்ணெய்- 1 மில்லிதேங்காய் எண்ணெய்- 5 மில்லி(இவற்றில் இருந்து 14 கொசுவர்த்திகள் தயாரிக்க முடியும். நாள் ஒன்றுக்கு 2 பயன்படுத்தினால் ஒரு வாரத்திற்கு உபயோகிக்கலாம்).


செய்ய வேண்டியவை


வீட்டைச் சுற்றி நன்னீர் தேங்கவிடக்கூடாது.பள்ளங்கள், தேங்காய் சிரட்டை, டயர், உடைந்த பீங்கான், பிளாஸ்டிக் பொருட்களை அகற்ற வேண்டும். குழந்தைகளுக்கு உடலை மறைக்கும் ஆடை அணிவிக்க வேண்டும். காய்ச்சல், தலைவலி, உடல்சோர்வு, வாந்தி, வயிற்றுப்போக்கு அறிகுறி இருந்தால் உடனடியாக அரசு மருத்துவமனையை அணுகவேண்டும். n காய்ச்சல் வந்தால் உடலில் நீர்ச்சத்து குறையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். பழச்சாறு, இளநீர் உள்ளிட்ட நீராகாரங்கள் கொடுக்க வேண்டும்.

செய்யக்கூடாதவை


நன்னீர் குடம், தொட்டிகளை திறந்து வைக்கக்கூடாது. 'ஏசி', பிரிட்ஜில் இருந்து வெளியேறும் தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். காய்ச்சல் பாதிப்பு வந்தால் சுயமருத்துவம் பார்க்கக்கூடாது.



50 படுக்கைகளுடன் டெங்கு வார்டு 'ரெடி'


மதுரை அரசு மருத்துவமனையில் டெங்கு அறிகுறியுடன் யாரும் அனுமதிக்கப்படவில்லை. இது டெங்கு சீசன் என்பதால், எதிர்கொள்ள தயாராக உள்ளோம். இக்காய்ச்சலுக்கு தேவையான மருந்து, மாத்திரைகளை இருப்பு வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. டாக்டர்கள், செவிலியர்களுக்கும் ஆலோசனை வழங்கியுள்ளோம். இதற்காக பிரத்யேக வார்டு தயாராக உள்ளது. அங்கு 50 படுக்கை வசதிகள் அமைக்கப்பட்டுள்ளன. -வனிதா, டீன், மதுரை அரசு மருத்துவமனை



மாநகராட்சியின் நடவடிக்கை


மதுரையில் இப்போது டெங்கு இல்லை. முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்கிறோம். புகை மருந்து 1,000 லிட்டர், நன்னீர் தொட்டிகளில் ஊற்றப்படும் அபேட் மருந்து 1,200 லிட்டர், கழிவுநீர் கால்வாய்களில் கலக்கப்படும் பேக்டிசைடு 800 கிலோ இருப்பு உள்ளது. வாய்க்காலில் உற்பத்தியாகும் கொசுக்களை ஒழிக்க ஆயில் பந்துகளை இடுகிறோம். கம்பூசியா மீன்கள் மூலம் ஏடிஸ் கொசு லார்வாவை அளிக்க நடவடிக்கை எடுத்துள்ளோம். நிலவேம்பு கசாயம் வழங்கப்படும். வீடுகள், வணிக வளாகங்களில் டெங்கு கொசுக்கள் உற்பத்தியானால் 100 முதல் 25 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும்.
- விசாகன், கமிஷனர், மதுரை மாநகராட்சி


மூலக்கதை