'மாஜி' கமிஷனர் மனு முன்ஜாமின் நிராகரிப்பு

தினமலர்  தினமலர்
மாஜி கமிஷனர் மனு முன்ஜாமின் நிராகரிப்பு

கோல்கட்டா, : சாரதா சிட்பண்ட் மோசடி வழக்கில், மேற்கு வங்க மாநிலம், கோல்கட்டாவின் முன்னாள் போலீஸ் கமிஷனர் ராஜிவ் குமார், முன்ஜாமின் கேட்டு மனு தாக்கல்செய்துள்ளார்.மேற்கு வங்கத்தில், முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான, திரிணமுல் காங்., அரசு நடக்கிறது. தலைநகர் கோல்கட்டாவை தலைமையிடமாக வைத்து செயல்பட்ட, சாரதா சிட்பண்ட் நிறுவனம், பொதுமக்களிடம் முதலீடுகளை பெற்று திருப்பி தராமல், 2,500 கோடி ரூபாய் மோசடி செய்ததாக, வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.


இந்த வழக்குகளை, கோல்கட்டா முன்னாள் போலீஸ் கமிஷனரான, ராஜிவ் குமார் விசாரித்து வந்தார். பின், இந்த வழக்கு, சி.பி.ஐ.,க்கு மாற்றப்பட்டது. ஆனால், பல முக்கிய ஆவணங்களைதராமல் மறைத்து விட்டதாக, ராஜிவ் குமார் மீது, சி.பி.ஐ., குற்றஞ்சாட்டியது.தற்போது, மேற்கு வங்க மாநிலம், சி.ஐ.டி., பிரிவின் கூடுதல், டி.ஜி.பி.,யாக, ராஜிவ் குமார் உள்ளார். இந்த மோசடி வழக்கு தொடர்பாக ஆஜராகும்படி, அவருக்கு, சி.பி.ஐ., சம்மன் அனுப்பிஉள்ளது.
இந்த நிலையில், முன்ஜாமின் கேட்டு, ராஜிவ் குமார் சார்பில், பராசத் மாவட்டத்தில் உள்ள, எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள் மீதான ஊழல் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில், நேற்று காலை, மனு தாக்கல் செய்யப்பட்டது. தங்களுடைய எல்லைக்குள் இல்லை என, சிறப்பு நீதிமன்றம், அதை நிராகரித்தது. அதைஅடுத்து, பராசத் மாவட்ட செஷன்ஸ் நீதிமன்றத்தில், ராஜிவ் குமார் மனு தாக்கல் செய்துள்ளார். இங்கேயும் அவரது முன்ஜாமின் மனு நிராகரிக்கப்பட்டது.

விரைவில் கைது?சாரதா சிட்பண்ட் மோசடி தொடர்பான வழக்கில், முன்னாள் போலீஸ் கமிஷனர், ராஜிவ் குமாரை கைது செய்வதற்கு, கோல்கட்டா உயர் நீதிமன்றம் தடை விதித்திருந்தது. சமீபத்தில் இந்த தடை நீக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி, ராஜிவ் குமாருக்கு, சி.பி.ஐ., தரப்பிலிருந்து, 'சம்மன்' அனுப்பப்பட்டது. ஆனால், அவர் ஆஜராகவில்லை.நேற்று காலை, 10:00 மணிக்கு ஆஜராகும்படி, மீண்டும் சம்மன் அனுப்பப்பட்டது. இரண்டாவது முறையும் அவர் ஆஜராகவில்லை. இதையடுத்து அவரைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை