தேர்தலில் தி.மு.க., சின்னத்தில் வேறு கட்சியினர் போட்டியிட்டது சரியா?

தினமலர்  தினமலர்
தேர்தலில் தி.மு.க., சின்னத்தில் வேறு கட்சியினர் போட்டியிட்டது சரியா?

சென்னை:வேறொரு கட்சியில் இருந்து, தி.மு.க., சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற, நால்வரின் தேர்தல் செல்லாது என, அறிவிக்க கோரிய வழக்கில், தேர்தல் ஆணையம், தி.மு.க., மற்றும் நான்கு எம்.பி.,க்கள் பதில் அளிக்க, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுஉள்ளது.

தேசிய மக்கள் சக்தி கட்சியின் தலைவர், எம்.எல்.ரவி தாக்கல் செய்த மனு:லோக்சபா தேர்தலில், பெரம்பலுார் தொகுதியில், இந்திய ஜனநாய கட்சியைச் சேர்ந்த, பாரிவேந்தர்; விழுப்புரம் தொகுதியில், விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த, ரவிகுமார் போட்டியிட்டு வெற்றி பெற்றனர்.

ஈரோடு தொகுதியில், ம.தி.மு.க.,வைச் சேர்ந்த, கணேசமூர்த்தி; நாமக்கல் தொகுதியில், கொங்கு மக்கள் தேசிய கட்சியைச் சேர்ந்த, சின்னராஜ் போட்டியிட்டு, வெற்றி பெற்றனர்.இவர்கள் அனைவரும், தி.மு.க.,வின், உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டனர். புதிய தமிழகம் கட்சியைச் சேர்ந்த, டாக்டர் கிருஷ்ணசாமி, அ.தி.மு.க., சின்னத்தில் போட்டியிட்டார்

ஒரு கட்சியில் இருந்து, மற்றொரு கட்சியின் சின்னத்தை பெற்று போட்டியிட்டுள்ளனர். கட்சியில் உறுப்பினராக இல்லாதவருக்கு, அந்த கட்சியின் சின்னத்தை ஒதுக்கியது, சட்டத்துக்கு எதிரானது;வாக்காளர்களை ஏமாற்றுவது போலாகும்.சின்னத்தை ஒதுக்கி அளித்த படிவங்களை, தேர்தல் அதிகாரி ஏற்றது சட்டவிரோதமானது. எனவே, இவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லாது என, உத்தரவிட வேண்டும்.இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.

மனு, நீதிபதிகள், எம்.சத்தியநாராயணன், சேஷசாயி அடங்கிய, 'டிவிஷன் பெஞ்ச்' முன், நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ''முக்கிய தகவலை மறைப்பதும் மோசடி தான். தேர்தல் அதிகாரியிடம் ஆட்சேபனை தெரிவித்தும், அவர், சட்டப்படி கடமை ஆற்றவில்லை,'' என்றார். அப்போது, நீதிபதிகள், 'தேர்தலில், சின்னம் தானே முக்கிய பங்கு வகிக்கிறது. அதைப் பார்த்து தான், பெரும்பாலும் ஓட்டு அளிக்கின்றனர்.

கட்சியில் உறுப்பினராக இல்லாதவரை, அந்தக் கட்சி சின்னத்தில் போட்டியிட அனுமதிப்பது, தேர்தல் நடைமுறைகளை மீறியதாக ஆகாதா' என, கேள்வி எழுப்பினர்.தேர்தல் ஆணையம் தரப்பில், வழக்கறிஞர் நிரஞ்சன் வாதாடியதாவது:கட்சியில் உறுப்பினராக அல்லாதவருக்கு, சின்னம் ஒதுக்கக் கூடாது என, அரசியல் கட்சிகளுக்கு உத்தரவிடக் கோரி, மனுதாரர் தாக்கல் செய்த மனு, ஏற்கனவே தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

ஒரு கட்சியை சேர்ந்தவர், மற்றொரு அங்கீகரிக்க பட்ட கட்சி சின்னத்தில் போட்டியிட முடியாது என, விதி இருந்தாலும், வேட்புமனுவை தேர்தல் அதிகாரி ஏற்றால், அதை எதிர்த்து, தேர்தல் வழக்கு தான் தொடர முடியும். இந்த வழக்கு, விசாரணைக்கு ஏற்புடையது அல்ல. இவ்வாறு, அவர் வாதாடினார்.இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:

தேர்தலில், சின்னங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இவ்வழக்கில் குறிப்பிடப்பட்டவர்கள், பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளின் உறுப்பினர்கள். அவர்களுக்காக, தி.மு.க., சார்பில் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. அவர்கள், தேர்தலில் வெற்றியும் பெற்றுள்ளனர்.எனவே, இவர்களுக்கு சின்னம் ஒதுக்கியது குறித்து, தி.மு.க., தரப்பில் பதில் அளிக்க வேண்டும். அதேநேரத்தில், தேர்ந்தெடுக்கப்பட்ட, எம்.பி.,க்களும் பதில் அளிக்க வேண்டும்.

உச்ச நீதிமன்றம் பிறப்பித்த பல்வேறு உத்தரவுகளால், பெரிய அளவில் தேர்தல் சீர்திருத்தங்கள் அமலுக்கு வந்துள்ளன.இந்த வழக்கும், பரிசீலிப்பதற்கு தகுதியானது தான். அதனால், மனு விசாரணைக்கு ஏற்கப்படுகிறது. எட்டு வாரங்களில், தேர்தல் ஆணையம், தி.மு.க., மற்றும், நான்கு எம்.பி.,க்கள், பதிலளிக்க வேண்டும். விசாரணை, நவ., 12க்கு தள்ளி வைக்கப்படுகிறது. இவ்வாறு, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மூலக்கதை