பா.ஜ., காய் நகர்த்தலில் தி.மு.க., அவுட் ஆனதா?

தினமலர்  தினமலர்
பா.ஜ., காய் நகர்த்தலில் தி.மு.க., அவுட் ஆனதா?

தி.மு.க.,வுக்கு வழங்கப்பட்ட ஒரு பார்லிமென்ட் நிலைக்குழு தலைவர் பதவிக்கு, கனிமொழி நியமனம் செய்யப்பட்ட விவகாரத்தின் பின்னணியில், பல்வேறு சம்பவங்கள் அரங்கேறியுள்ளன.

இது குறித்து டில்லியில் தகவலறிந்த வட்டாரங்கள் கூறியதாவது:மத்தியில், நிலைக்குழு பதவிகளுக்கு, தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களை நியமிக்க முடிவெடுத்த பா.ஜ., அரசு, அதற்கான பெயர் பட்டியலை தருமாறு, அனைத்து கட்சிகளிடமும் கேட்டது.எம்.பி.,க்களின் பலத்திற்கு ஏற்ப, இரண்டு நிலைக்குழுக்களின் தலைவர் பதவிகள் கிடைக்கும் என, தி.மு.க., எதிர்பார்த்திருந்தது.

அக்கட்சியின் பார்லிமென்ட் தலைவரான, டி.ஆர்.பாலு தவிர, மூத்த எம்.பி.,க்கள் ராஜா, கனிமொழி, தயாநிதி, பழனிமாணிக்கம் ஆகியோரும், இப்பதவிகள் மீது, ஒரு கண் வைத்து இருந்ததால், கடும் போட்டி நிலவியதுஇந்நிலையில், 'ஒரேயொரு தலைவர் பதவிதான் தரப்படும்' என, மத்திய அரசிடமிருந்து தகவல் வந்தது. இதையடுத்து, டி.ஆர்.பாலு பெயர் தரப்பட்டது. அதோடு, ரயில்வே நிலைக்குழு தலைவர் பதவியை, தங்களுக்கு ஒதுக்கும்படியும், தி.மு.க., தரப்பில் கேட்கப்பட்டது.

ஆனால், திடீர் திருப்பமாக, கனிமொழிக்கு, நிலைக்குழு தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம், டி.ஆர்.பாலுவுக்கான வாய்ப்பு தட்டிப்பறிக்கப்பட்டதா என்ற கேள்வி, பார்லி., வட்டாரங்களில் வளைய வந்த நிலையில், இதன் பின்னணியில், பல்வேறு சம்பவங்கள் அரங்கேறியுள்ளன.

பார்லிமென்ட்டில், பா.ஜ.,வையும் மத்திய அரசையும் கடுமையாக விமர்சனம் செய்து, தி.மு.க., - எம்.பி.,க்கள் பலரும் பேசியபோதே, பா.ஜ., தரப்பு குறித்து வைத்துக் கொண்டது.தி.மு.க., தரப்பில், இந்தப்பதவிகளுக்கு கடும் போட்டி இருப்பதை அறிந்து வைத்திருந்ததால்,கொஞ்சம் குட்டையை குழப்பிப் பார்க்க, பா.ஜ., முடிவெடுத்தது.

இதையடுத்து, 'ரயில்வே நிலைக்குழு தலைவர் பதவியை தர முடியாது' என, அதிரடியாக மறுத்தது. பா.ஜ.,வின் பதிலை, சற்றும் எதிர்பார்க்காத, டி.ஆர்.பாலு, ரயில்வே நிலைக்குழு இல்லை எனில், தனக்கு பதவி வேண்டாம் என, கூறிவிட்டார்.

'தி.மு.க.,வுக்கு என்ன தான் தரப்படும்?' என கேட்டபோது, 'உரம் மற்றும் ரசாயனத் துறைக்கான நிலைக்குழு தலைவர் பதவி' என பதில் வந்தது. டி.ஆர்.பாலு ஒதுங்கிக் கொண்டதால், அந்த பதவியை, மூத்த எம்.பி.,க்களில் யாருக்கு தருவது என, மீண்டும் குழப்பம் ஏற்பட்டது.ஏற்கனவே, டில்லி விவகாரங்களில் ஓரங்கட்டப்படுவது, உதயநிதிக்கு இளைஞர் அணி தலைவர் பதவி வழங்கப் பட்டது உட்பட பல்வேறு விஷயங்களில், அதிருப்தியில் இருப்பதாக கூறப்படும் கனிமொழிக்கு, அந்த பதவியை தருவது என, தீர்மானிக்கப்பட்டது.

பா.ஜ., வும், கனிமொழியின் பெயர் என்றதும், அதற்கு ஆட்சேபனை தெரிவிக்காமல் ஏற்று கொண்டு விட்டது.நிலைக்குழு தலைவர் பதவி என்ற ஒரு சிறிய விஷயத்தில், தி.மு.க.,வுக்குள், குட்டையை குழப்பி பார்த்த, பா.ஜ., வரும் காலங்களிலும், பல்வேறு காய் நகர்த்தல்கள் மூலம், தி.மு.க.,வை திணறடிக்க காத்திருக்கிறது. இவ்வாறு, அந்தவட்டாரங்கள், தெரிவிக்கின்றன.

-- நமது டில்லி நிருபர் -

மூலக்கதை