பொருளாதார சரிவை சமாளிக்க மேலும் சில துறைகளுக்கு சலுகை : ஓரிரு நாளில் மத்திய அரசு அறிவிப்பு

தினகரன்  தினகரன்
பொருளாதார சரிவை சமாளிக்க மேலும் சில துறைகளுக்கு சலுகை : ஓரிரு நாளில் மத்திய அரசு அறிவிப்பு

புதுடெல்லி: பொருளாதார மந்தநிலையை சீர் செய்ய, 4ம் கட்டமாக மேலும் சில  துறைகளுக்கு சலுகைகள் வழங்க மத்திய நிதி அமைச்சகம் முடிவு செய்துள்ளது. நாட்டில் வரலாறு காணாத  பொருளாதார மந்தநிலை நிலவுகிறது. ஆட்டோமொபைல் உள்ளிட்ட முக்கிய பல துறைகள்  கடும் சரிவை சந்தித்து வருகின்றன. பொருளாதார வளர்ச்சி, கடந்த 6 ஆண்டுகளில் இல்லாத  அளவுக்கு 5 சதவீதம் என்ற அளவில் சரிந்துள்ளது.பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் முயற்சியில் மத்திய அரசு தீவிரமாக  ஈடுபட்டுள்ளது. இதற்காக, ஆட்டோமொபைல், ரியல் எஸ்டேட், ஏற்றுமதி துறைகளுக்கு  சில சலுகைகளை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் சமீபத்தில்  அறிவித்தார். முதல் கட்டமாக கடந்த மாதம் 23ம் தேதி அவர் வெளியிட்ட  அறிவிப்பில், நடப்பு நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட  வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கான கூடுதல் வருமான வரியை திரும்பப் பெறுவதாக  தெரிவித்தார். மேலும், புதிய வாகனங்களுக்கான பதிவுக் கட்டணத்தை பல  மடங்கு உயர்த்தும் திட்டத்தை ஒத்திப் போடுவது, எலெக்ட்ரிக் வாகனங்களை  போலவே, பெட்ரோல், டீசல் வாகனங்கள் தொடர்ந்து பதிவு செய்வது, பிஎஸ்-4  தரக்கட்டுபாடு வாகனங்கள் பதிவு செய்யப்படும் ஆண்டுகள் வரை பயன்படுத்த  அனுமதிப்பது போன்ற சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன. இதைத் தொடர்ந்து, கடந்த  மாதம் 30ம் தேதி 2ம் கட்டமாக அவர் பொதுத்துறை வங்கிகளின் இணைப்பு குறித்து  அறிவித்தார். கடன் வழங்குவதை மேம்படுத்தும் வகையில், 10 பொதுத்துறை  வங்கிகளை 4 வங்கிகளாக இணைப்பதாக அவர் தெரிவித்தார். பின்னர், 3ம்  கட்டமாக கடந்த 14ம் தேதி, வீட்டு வசதி துறைக்கு ரூ.20 ஆயிரம் கோடி மற்றும்  ஏற்றுமதி தொழில் துறைக்கு ரூ.50 ஆயிரம் கோடி என மொத்தம் ரூ.70 ஆயிரம் கோடி  மதிப்பிலான சலுகைகளை அறிவித்தார். இது குறித்து கடந்த வாரம் பேட்டி அளித்த  ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்ததாஸ், ‘‘மத்திய அரசு மேற்கொள்ளும் சரியான  நடவடிக்கை மூலம் பொருளாதாரம் மேம்படும். இதை இறுதி சலுகையாக இதனை கருத முடியாது. மேலும் பல  துறைகளுக்கான சலுகைகள் வரும் நாட்களில் அறிவிக்கப்படலாம்’’ என்றார்.அதன்படி,  4ம் கட்டமாக மேலும் சில துறைகளுக்கு சலுகைகள் அறிவிக்கப்பட இருப்பதாக  தகவல்கள் வெளியாகி உள்ளன. இது குறித்து நிதித்துறை அமைச்சக மூத்த அதிகாரி  ஒருவர் கூறுகையில், ‘‘பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக மேலும் சில  துறைகளுக்கு சலுகைகள் அறிவிக்கப்பட உள்ளது. இதற்கான அறிக்கைகள் தயார்  நிலையில் உள்ளன. அடுத்த ஓரிரு நாட்களில் இதற்கான அறிவிப்புகளை நிதி  அமைச்சர் வெளியிடுவார்’’ என்றார். ஆனால் இம்முறை எந்தெந்த துறைகளுக்கு  சலுகை வழங்கப்படும் என்பது குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.ஜிஎஸ்டி வரி குறைப்பு?ஜிஎஸ்டி கவுன்சிலின் 37வது கூட்டம் டெல்லியில் வரும் 20ம் தேதி நடக்க உள்ளது.  இதில் பங்கேற்கும் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், ஆட்டோமொபைல், நுகர் பொருட்கள், ஓட்டல்களுக்கான வரி விகிதத்தை குறைக்கலாம் என  எதிர்பார்க்கப்படுகிறது. அதோடு, பொதுத்துறை வங்கி தலைவர்களை நாளை அவர்  சந்தித்து பேச உள்ளார். இதில், ரிசர்வ் வங்கி அறிவித்துள்ள கடன்களுக்கான வட்டி குறைப்பு அனைத்து வங்கியிலும் அமல்படுத்துவது குறித்து முடிவு  செய்யப்படும் என தெரிகிறது.

மூலக்கதை