பள்ளிகளில் காந்தி குறித்து சிறப்பு நிகழ்ச்சி

தினமலர்  தினமலர்
பள்ளிகளில் காந்தி குறித்து சிறப்பு நிகழ்ச்சி

சென்னை : மகாத்மா காந்தி குறித்து, கல்வி நிறுவனங்களில், ஓர் ஆண்டுக்கு சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்த, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.


தேசத்தந்தை மகாத்மா காந்தியடிகளின், 150வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு, அடுத்த மாதம், 2ம் தேதி முதல், 2020 அக்., 2 வரை, நாடு முழுவதும், சிறப்பு நிகழ்ச்சிகளை நடத்த, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.இதுதொடர்பாக, பள்ளிகளுக்கு, தமிழக பள்ளி கல்வியின் ஒருங்கிணைந்த கல்வி திட்ட இயக்குனர் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:காந்தியடிகளின், 150வது பிறந்த நாளை கொண்டாடும் வகையில், வரும், 23 முதல், அக்., 2 வரை, காந்திய மதிப்புகள் சார்ந்து, பல்வேறு செயல்பாடுகளை முதற்கட்டமாக, மேற்கொள்ள வேண்டும்.


பின், இந்த செயல்பாடுகளை, 2020 அக்., 2 வரை மேற்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது. வரும், 23ல், சர்வமத பிரார்த்தனை; 24ல், பாட்டு, நாடகம், ஓரங்க போட்டி; 25ல், துாய்மை விழிப்புணர்வு பேரணி; 26ல், பேச்சு போட்டி, கதைகள் கூறுதல், பட்டிமன்றம்; 27ல், கவிதை, கட்டுரை போட்டிகள்; 28ல், ஓவிய போட்டி; 30ல், காந்தியடிகளுடன் தொடர்புடைய இடங்களை பார்வையிடுதல் போன்றவற்றையும் நடத்த வேண்டும். அக்டோபர், 1ல், மாணவர்கள், பெற்றோருக்கு வினாடி வினா; அக்., 2ல் காந்தி ஜெயந்தி விழாவுக்கான கலை நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும். இதன்பின், மொத்தம் உள்ள அனைத்து நிகழ்ச்சிகளையும், 2020 அக்., 2 வரை, ஓர் ஆண்டுக்கு நடத்த வேண்டும்.இவ்வாறு, சுற்ற்றிக்கையில் கூறப்பட்டுள்ளது.


முதற்கட்ட நிகழ்ச்சிகளை நடத்தும், வரும், 23 முதல், அக்., 2 வரை, பள்ளி மாணவர்களுக்கு, காலாண்டு தேர்வு விடுமுறை காலம். இந்த கால கட்டத்தில், என்.எஸ்.எஸ்., எனப்படும், நாட்டு நலப்பணி திட்ட மாணவர்களுக்கு, நலப்பணி முகாம்கள் ஏற்கனவே அறிவிக்கப் பட்டுள்ளன. எனவே, என்.எஸ்.எஸ்., முகாம்கள் வாயிலாக, காந்தியடிகள் குறித்த சிறப்பு நிகழ்ச்சிகளை நடத்துவதற்கும், பள்ளி கல்வி துறை திட்டமிட்டுள்ளது.

மூலக்கதை