காஷ்மீர் விவகாரம் முக்கிய பங்கு வகிக்காது: சீனா விளக்கம்

தினமலர்  தினமலர்
காஷ்மீர் விவகாரம் முக்கிய பங்கு வகிக்காது: சீனா விளக்கம்

பெய்ஜிங்: பிரதமர் மோடி - சீன அதிபர் ஷி ஜிங் பிங் இடையே நடக்கும் இரண்டாவது அதிகாரப்பூர்வமற்ற சந்திப்பில், காஷ்மீர் விவகாரம் முக்கிய பங்கு வகிக்காது என சீனா கூறியுள்ளது.

பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஷி ஜிங்பிங் இடையிலான, இரண்டாவது அதிகாரப்பூர்வமற்ற சந்திப்பு வரும் அக்டோபர் 10 முதல் 12ம் தேதி வரை மாமல்லபுரத்தில் நடக்க உள்ளது.

இந்த சந்திப்பு தொடர்பாக சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் ஹூவா சுன்யிங் கூறுகையில், அதிபர் ஷி ஜிங்பிங்கும் , பிரதமர் மோடியும் அவர்கள் விருப்பப்படி தான் ஆலோசனை நடத்துவார்கள். இந்த சந்திப்பு அதிகாரப்பூர்வமற்ற சந்திப்பு என்பதால், காஷ்மீர் குறித்து, விவாதிக்கப்படும் என்பதை கூற முடியாது. இந்த சந்திப்பின் போது, என்ன பேச வேண்டும் என்பதை, இரு தலைவர்களும் முடிவு செய்து கொள்ளட்டும். காஷ்மீர் விவகாரம் முக்கிய பங்கு வகிக்காது.காஷ்மீர் விவகாரம் என்பது, இந்தியா பாகிஸ்தான் இடையிலான இரு தரப்பு விவகாரம். இந்தவிவகாரத்தில் போர் ஏற்படுவதை நாங்கள் விரும்பவில்லை. இந்தியாவும், பாகிஸ்தானும், சீனாவின் நெருங்கிய நட்பு நாடுகள். இரு நாடுகளும், பிரச்னையை அமைதியாக பேசி தீர்த்து கொள்வதேயே நாங்கள் விரும்புகிறோம். அமெரிக்கா ஈரான் இடையில் உள்ள உறவை விட, இந்தியா பாகிஸ்தான் இடையிலான உறவு மேம்படும் என நம்புகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

ஐ.நா., பாதுகாப்பு சபையில், காஷ்மீர் விவகாரம் குறித்து தீர்மானம் கொண்டு வர பாகிஸ்தான் முயற்சி செய்தது. ஆனால், சீனாவை தவிர எந்த நாடுகளும் ஆதரிக்கவில்லை. இந்த விவாதத்தின் போது, எந்த முடிவும் வெளியிடப்படவில்லை. அறிக்கையும் வெளியிடப்படவில்லை. இது சீனாவிற்கும் பாகிஸ்தானிற்கும் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது.

மூலக்கதை