நீர் நிலையை சீரமைக்காத அதிகாரிகளுக்கு'கல்தா!'

தினமலர்  தினமலர்
நீர் நிலையை சீரமைக்காத அதிகாரிகளுக்குகல்தா!

தமிழகத்தில், நீர்நிலைகள் சீரமைப்பு பணியில், அரசு அதிக ஆர்வம் காட்டி வருகிறது. இதற்கு தேவையான முழு நிதியும் ஒதுக்கப்பட்டு, பராமரிப்பு பணிகளை துரிதப்படுத்துமாறு, மாவட்ட கலெக்டர்கள் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு, உத்தரவிடப்பட்டு உள்ளது. வடகிழக்கு பருவ மழை, அக்டோபரில் துவங்குவதால், இம்மாத இறுதிக்குள், இப்பணிகளை முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு, 'கெடு' விதிக்கப்பட்டு உள்ளது. இதில், அலட்சியம் காட்டும் அதிகாரிகளுக்கு, 'கல்தா' கொடுக்க, முதல்வர், இ.பி.எஸ்., அதிரடி முடிவு எடுத்துள்ளார்.

தமிழகம் முழுவதும், குடிமராமத்து திட்டத்தின் கீழ், 1,829 ஏரிகள் மற்றும் பாசன கால்வாய்களை புனரமைப்பதற்கு, 499 கோடி ரூபாயை, அரசு ஒதுக்கிஉள்ளது. இதற்கான பணிகள், ஜூனில் துவங்கின. 'நீர்வள பாதுகாப்பு தொடர்பாக, மக்கள் இயக்கம் துவங்கப்படும்' என, முதல்வர், இ.பி.எஸ்., சட்டசபையில் அறிவித்தார்.

நிதி ஒதுக்கீடு



அதன்படி, நீர்வள பாதுகாப்பு மற்றும் நீர் மேலாண்மை இயக்கம் என்ற அமைப்பை, அனைத்து மாவட்டங்களிலும், அரசு அமைத்துள்ளது. இதன் வாயிலாக, 5,000 சிறுபாசன ஏரிகள் மற்றும் 25 ஆயிரம் குளங்களை சீரமைக்க, முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக, 1,250 கோடி ரூபாயை, மத்திய, மாநில அரசுகள் இணைந்து ஒதுக்கின.

புகார்கள்



இத்திட்டத்தை, ஆக., 7ல், திருவள்ளூரில், முதல்வர் துவக்கி வைத்தார். இந்த நிதியில், அனைத்து மாவட்டங்களிலும் பணிகள் நடந்து வருகின்றன. இவற்றை, அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் கண்காணித்து வருகின்றனர். மூன்று மாவட்டத்திற்கு, ஒருவர் வீதம், சிறப்பு அதிகாரிகளையும், அரசு நியமித்துள்ளது.

இந்நிலையில், அக்டோபர் மாதம், வடகிழக்கு பருவ மழை துவங்க உள்ளது. ஆனால், பல மாவட்டங்களில், நீர்நிலைகளின் சீரமைப்பு பணிகள், இன்னும் முடியவில்லை. இது தொடர்பாக, அரசுக்கு ஏராளமான புகார்கள் வந்துள்ளன. இதையடுத்து, தலைமை செயலர் சண்முகம், 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக, அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன், நேற்று அவசர ஆலோசனை நடத்தினார். சென்னை, தலைமை செயலகத்தில், நேற்று மாலை, 3:00 மணிக்கு துவங்கிய, இந்த ஆலோசனை, ஐந்து மணி நேரத்திற்கும் மேலாக நீடித்தது.

கெடு



மாவட்ட வாரியாக, நீர்நிலைகளை சீரமைக்க ஒதுக்கப்பட்ட நிதி; அதில் செலவு செய்யப்பட்ட தொகை; முடிவடைந்த பணிகள் குறித்து, கலெக்டர்களிடம் விளக்கம் கேட்கப்பட்டு உள்ளது. அப்போது, நீர்நிலைகள் புனரமைப்பு பணியில், முழு கவனம் செலுத்தாத கலெக்டர்களை, தலைமை செயலர், சண்முகம் கண்டித்துள்ளார். இதேபோல, பணிகளை முடிக்காத, பொதுப்பணித் துறை அதிகாரிகளை, துறை செயலர், மணிவாசன் கண்டித்துஉள்ளார்.

மேலும், இம்மாத இறுதிக்குள், இப்பணிகளை முழுவதும் முடிக்க, கலெக்டர்கள் மற்றும் பொதுப்பணித் துறை அதிகாரிகளுக்கு, கெடு விதிக்கப்பட்டுள்ளது.இந்த விவாதத்தில் பேசப்பட்ட தகவல்கள், முதல்வர் கவனத்திற்கு சென்றதும், இம்மாத இறுதிக்குள் பணிகளை முடிக்காத, அதிகாரிகளை இடமாற்றம் செய்யும்படி, தலைமை செயலருக்கு, அவர் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். அதேநேரத்தில், சிறப்பாக செயல்பட்ட, கலெக்டர்கள் மற்றும் அதிகாரிகள், வரும், ஜனவரியில் நடக்கும் கலெக்டர்கள் மாநாட்டில், பரிசு வழங்கி பாராட்டப்படுவர் என்றும், அவர் தெரிவித்துஉள்ளார்.

- நமது நிருபர் -

மூலக்கதை