பாக்., வீரர்களுக்கு பிரியாணி ‛கட்'

தினமலர்  தினமலர்
பாக்., வீரர்களுக்கு பிரியாணி ‛கட்

கராச்சி: பாகிஸ்தான் கிரிக்கெட் அணி வீரர்கள் பிரியாணி சாப்பிடக் கூடாது என அணியின் பயிற்சியாளர் மிஸ்பா உல் ஹக் புதிய கட்டுப்பாடு விதித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராகவும், தேர்வு குழு தலைவராகவும் சமீபத்தில் பொறுப்பேற்ற மிஸ்பா உல் ஹக், அணியை வலுப்படுத்த பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.
தற்போது உணவில் கட்டுப்பாடு விதித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாக்., வீரர்கள் சோம்பலாக இருப்பதாக அந்த நாட்டு ரசிகர்களே விமர்சனம் செய்த நிகழ்வுகளும் நடந்துள்ளன. அதற்கு சமீபத்திய சான்றாக உலக கோப்பையில் இந்தியாவுடனான போட்டியில் கேப்டன் சர்பராஸ் அகமது, கொட்டாவி விட்டது கடும் விமர்சனத்திற்கு உள்ளானது.

இதனை போக்கும் விதமாக மிஸ்பா, அணி வீரர்களை சுறுசுறுப்பாக்க உணவு கட்டுப்பாடு குறித்து அறிவுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி அதிகமான எண்ணெயில் தயாரிக்கப்பட்ட உணவு பொருட்கள், இறைச்சி உணவுகள் மற்றும் இனிப்பு பலகாரங்களை வீரர்கள் சாப்பிடக்கூடாது. குறிப்பாக, அணி வீரர்கள் யாரும் பிரியாணி உட்கொள்ளக்கூடாது.

சுட்ட உணவுப்பண்டங்கள் மற்றும் அதிக பழங்கள் சேர்க்கப்பட்ட பாஸ்தா மட்டுமே போட்டியின்போது வழங்கப்படவேண்டும். இதையே தேசிய போட்டிகளிலும் பின்பற்ற வேண்டும். இந்த உணவு முறையை கட்டாயமாக பின்பற்றவேண்டும் எனவும் அவ்வாறு பின்பற்றாதவர்கள் அணியில் இருந்து நீக்கப்படுவர் எனவும் மிஸ்பா தெரிவித்திருப்பதாக கூறப்படுகிறது.

மூலக்கதை