தூய்மை இந்தியா திட்டத்துக்காக மோடிக்கு 24ம் தேதி கோல்கீப்பர் விருது

தினகரன்  தினகரன்
தூய்மை இந்தியா திட்டத்துக்காக மோடிக்கு 24ம் தேதி கோல்கீப்பர் விருது

நியூயார்க்: தூய்மை இந்தியா திட்டத்தை சிறப்பாக நிறைவேற்றி வருவதற்காக பிரதமர் மோடிக்கு 24ம் தேதி `குளோபல் கோல்கீப்பர்’ விருது வழங்கப்படுகிறது.பிரதமர் மோடி ஐநா பொதுக்குழுக் கூட்டத்தில்  பங்கேற்க வரும் 21 முதல் 27ம் தேதி வரை அமெரிக்கா செல்ல இருக்கிறார். அவர்,  ஐநா பொதுச்சபை கூட்டத்தில் 27ம் தேதி உரையாற்றுகிறார். முன்னதாக,  செப்டம்பர் 24ம் தேதி புளூம்பெர்க்  குளோபல் தொழில் கூட்டமைப்பு  கூட்டத்திலும் உரையாற்ற உள்ளார். அப்போது அவருக்கு பில் அண்ட்  மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளையின் சார்பில் குளோபல் கோல்கீப்பர் விருது வழங்கப்பட  உள்ளது. தூய்மை இந்தியா  திட்டத்தைச் சிறப்பாக நிறைவேற்றி வரும் மோடியின் சேவையைப்  பாராட்டும் விதமாக பில் அண்ட்  மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை அவருக்கு  ‘குளோபல் கோல்கீப்பர்’ விருது வழங்க உள்ளது.இந்திய மக்களுக்குக்கு  கழிப்பறை பயன்பாடு குறித்த விழிப்புணர்வை ஊக்குவிக்கும் வகையில் கடந்த  2014ம் ஆண்டு, அக்டோபர் 2ம் தேதி தூய்மை இந்தியா திட்டத்தை பிரதமர் மோடி  தொடங்கி வைத்தார். இதனால் கடந்த 4 ஆண்டுகளில்,  நாட்டில் ஏறக்குறைய 9 கோடி  கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன. முன்னதாக கிராமங்களில் 38 சதவீதம் மட்டுமே  கழிப்பறை இருந்த நிலையில், தற்போது அது 98 சதவீதமாக உயர்ந்துள்ளது. மோடி  தலைமையில் இத்திட்டம் சிறப்பான  முறையில் நிறைவேற்றப்பட்டு வருவதால் அவரது  சேவையை பாராட்டி இந்த விருது வழங்கப்பட உள்ளது.

மூலக்கதை