ஈரான் மீது ராணுவ நடவடிக்கை இல்லை: டிரம்ப்

தினமலர்  தினமலர்

வாஷிங்டன், 'மேற்காசிய நாடான சவுதி அரேபியாவின் மிகப் பெரிய கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் நடந்த தாக்குதலுக்கு ஈரான் தான் காரணம் என்பது தெரியும். இருப்பினும் அதன் மீது தற்போதைக்கு ராணுவ நடவடிக்கைகள் எடுக்கப்படாது' என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கூறியுள்ளார்.மேற்காசிய நாடான ஈரானுடனான அணு ஒப்பந்தத்தை அமெரிக்கா ரத்து செய்தது. மேலும் ஈரான் மீது பொருளாதார தடையும் விதித்தது. அதைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையே பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது.இந்நிலையில் மற்றொரு மேற்காசிய நாடான ஏமனில் அரசு படைகளுக்கும் ஹவுதி பயங்கரவாத அமைப்புக்கும் இடையே உள்நாட்டு போர் நடந்து வருகிறது. இதில் அரசு படைகளுக்கு சவுதி அரேபியாவும் ஹவுதி அமைப்புக்கு ஈரானும் ஆதரவு தெரிவித்து வருகின்றன.இந்தப் பிரச்னைகளால் மத்தியக் கிழக்கு நாடுகள் பிராந்தியத்தில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. இந்த சூழ்நிலையில் சவுதி அரேபியாவின் 'அரம்கோ' நிறுவனத்தின் மிகப் பெரிய கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் 'ட்ரோன்' எனப்படும் ஆளில்லா உளவு விமானம் மூலம் சமீபத்தில் தாக்குதல் நடத்தப்பட்டது.இந்த தாக்குதலுக்கு ஹவுதி பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. ஆனால் ஈரான் தான் இந்த தாக்குதலை நடத்தியுள்ளதாக சவுதி அரேபியாவும் அமெரிக்காவும் கூறி வருகின்றன.ஈரான் மீது உடனடியாக போர் தொடுக்கப் போவதாகவும் அமெரிக்கா எச்சரித்து வந்தது. இந்த நிலையில் பதற்றத்தை தணிக்கும் முயற்சியில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் ஈடுபட்டுள்ளார். சமூக வலை தளங்களில் நேற்று வெளியிட்டுள்ள செய்தியில் அவர் கூறியுள்ளதாவது: சவுதி அரேபியாவின் மீது யார் தாக்குதல் நடத்தியது என்பது எங்களுக்கு தெரியும். இது தொடர்பாக சவுதி அரேபியாவுடன் பேசி வருகிறோம். தற்போதைக்கு ஈரான் மீது சந்தேகம் இருந்தாலும் ராணுவ நடவடிக்கைகள் எடுக்கப்படாது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.'மத்தியக் கிழக்கு நாடுகளில் போர் ஏற்படுவதை அதிபர் டிரம்ப் விரும்பவில்லை. அதனால் சவுதி அரேபியாவுடன் பேசுவதற்காக வெளியுறவு அமைச்சர் மைக் போம்பியோ செல்ல உள்ளார்' என வெள்ளை மாளிகை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.இதற்கிடையே இந்த குற்றச்சாட்டுகளை ஈரான் மறுத்துள்ளது. 'நியூயார்க்கில் நடக்க உள்ள ஐ.நா. பொது சபை கூட்டத்தின்போது அமெரிக்க அதிபரை ஈரான் அதிபர் ஹாசன் ரூஹானி சந்திக்க மாட்டார்' என ஈரான் அரசு கூறியுள்ளது.

சமரசத்துக்கு இடமில்லை!
மேற்காசிய நாடான ஈரான் முதன்மை தலைவர் அயதுல்லா
அலி காமேனி கூறியதாவது:
சவுதி அரேபிய எண்ணெய் நிறுவனத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் ஈரான் மீது அமெரிக்கா அதிகப்படியான அழுத்தத்தை கொடுத்து வருகிறது. இது தேவையற்றது. இது தொடர்பாக
அமெரிக்காவுடன் சமசர பேச்சில் ஈடுபடக் கூடாது என்பதில் ஈரான் தெளிவாக உள்ளது. அப்படி செய்தால் ஈரான் மீதான
அமெரிக்காவின் நிபந்தனைகளை அவர்கள் நிர்பந்திக்க துவங்குவர்.
ஒருபோதும் அது நடக்காது. இவ்வாறு அவர் கூறினார்.

உச்சத்தில் எண்ணெய் விலைசவுதி அரேபியாவில் உள்ள உலகின் மிகப் பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையின் மீது நடத்தப்பட்ட தாக்குதலால் அதன் உற்பத்தி பாதிக்கப்பட்டது. இதனால் மற்ற நாடுகளுக்கான சப்ளை பாதிக்கப்பட்டதால் கச்சா எண்ணெய் விலை சர்வதே சந்தையில் கடுமையாக உயர்ந்தது.கடந்த 1991ல் நடந்த வளைகுடா போருக்குப் பிறகு கச்சா எண்ணெய் விலை கடும் உயர்வை சந்தித்துள்ளது. கச்சா எண்ணெய் 159 லிட்டர்கள் கொண்ட ஒரு பேரல் விலை 575 ரூபாய் உயர்ந்து 4530 ரூபாயாக இருந்தது. இது 15 சதவீத உயர்வாகும்.

இந்திய பிரதமர் மோடி பாக். பிரதமர் இம்ரான் கான்
ஆகியோரை விரைவில் சந்தித்து பேசவுள்ளேன்.
இந்தியா - பாக். இடையே நிலவிய பதற்றம் பெருமளவு குறைந்துள்ளது. ஆக்கப்பூர்வமான முயற்சிகளை இரு நாடுகளும் தொடரும் என்ற நம்பிக்கை உள்ளது.
டொனால்டு டிரம்ப் அமெரிக்க அதிபர்

மூலக்கதை