ஆப்கானில் தற்கொலை படை தாக்குதல்: அதிபர் உயிர்தப்பினார்

தினமலர்  தினமலர்
ஆப்கானில் தற்கொலை படை தாக்குதல்: அதிபர் உயிர்தப்பினார்

காபூர்: ஆப்கானில் தேர்தல் பிரசாரத்தின் போது நடந்த தற்கொலை படை தாக்குதலில் அந்நாட்டு அதிபர் காயமின்றி உயிர் தப்பினார்.
ஆப்கானிஸ்தான் மேற்கு பகுதியில் தலிபான் பயங்கரவாதிகள் மற்றும் சிறிய பயங்கரவாத குழுக்களின் ஆதிக்கம் இருந்து வருகிறது. போட்டி அரசாங்கத்தை நடத்தி வருகின்றனர்.


இந்நிலையில் ஆப்கானிஸ்தான் அதிபர் தேர்தல் வரும் 28-ம் தேதி நடக்கிறது. இதையொட்டி ஆப்கானின் பர்வான் மாகாணத்தில் அதிபர் அஷ்ரப் கானி , பிரசாரம் செய்ய வந்தார்.அப்போது நடந்த தற்கொலைப்படை தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். அஷ்ரப் கானியை குறி வைத்தே இத்தாக்குதல் நடந்ததாக கூறப்படுகிறது. எனினும் அதிபர் காயமின்றி உயிர் தப்பினார்.தொடர்ந்து காபூலில் அமெரிக்க தூதரகம் அருகே நடந்த மற்றொரு தற்கொலை படை தாக்குதலில் 22 பேர் கொல்லப்பட்டதால் நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
முன்னதாக ஆப்கானில் தலிபான் பயங்கரவாதிகள் மீது நடவடிக்கை எடுக்க ராணுவம் மற்றும் போலீசார் ஆகியோரை கொண்ட கூட்டுப்படைகளுக்கு அதிபர் அஷ்ரப் கானி உத்தரவிட்டுள்ளார். இந்த படைகளுக்கு உதவியாக அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படையினரும் வான்வழியாக பயங்கரவாதிகள் மீது தாக்குதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

காபூலில் கடந்த சில நாட்களுக்கு முன் தலிபான் பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த அமெரிக்க வீரர்கள் 11 பேர் பலியாயினர். இதற்கு கண்டனம் தெரிவித்த அதிபர் டிரம்ப், தலிபான்களுடனான ரகசிய பேச்சுவார்த்தையை ரத்து செய்தார். இந்த சூழ்நிலையில் இன்று இரு வேறு இடங்களில் தற்கொலை படை தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது.


மூலக்கதை