மறந்தது லக்கேஜ்: பறந்தது விமானம்

தினமலர்  தினமலர்
மறந்தது லக்கேஜ்: பறந்தது விமானம்

புதுடில்லி: டில்லியில் இருந்து இஸ்தான்புல் சென்ற இண்டிகோ விமானத்தில் பயணிகளின் உடமைகளை மறந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.


நேற்று (செப்., 16) டுவிட்டர் டிரண்டிங்கில் தனியார் விமான நிறுவனமான இண்டிகோ குறித்து #ShameonIndiGo என்ற ஹேஸ்டேக் அதிகமாக பகிரப்பட்டது. இது குறித்து ஆராய்ந்ததில் செப்., 15ம் தேதி டில்லியில் இருந்து இஸ்தான்புல் சென்ற இண்டிகோ விமானம், பயணிகளின் உடமைகளை மறந்து வைத்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிகழ்வு குறித்து சின்மே டப்கே என்ற டுவிட்டர் பயனாளி வெளியிட்ட பதிவின் மூலம் இந்த விவகாரம் தெரிய வந்தது.


இண்டிகோ விமானத்தில் டில்லியில் இருந்து இஸ்தான்புல் சென்றேன். இஸ்தான்புல் விமான நிலையத்தில் உடமைகளுக்காக காத்திருக்கும் போது ஒரு பேப்பர் கொடுத்தனர். அதில், எந்தவித உடமைகளையும் விமானத்தில் ஏற்றவில்லை என தெரிவிக்கப்பட்டது. பெரிய விமான நிறுவனமான இண்டிகோ, பயணிகளின் உடமைகளை எப்படி மறக்க முடியும்.


சில பயணிகளின் உடமைகளை மட்டும் மறந்தால் பரவாயில்லை, அனைத்து பயணிகளின் உடமைகளையுமா மறப்பது. டில்லியில் உள்ள விமான ஊழியர்கள் என்ன செய்து கொண்டிருந்தனர். என் தந்தை ஒரு நீரிழிவு நோயாளி. அவர் தினமும் உட்கொள்ளும் மருந்துகள் அனைத்தும் அவரின் உடமைகளில் தான் இருக்கிறது.


இந்த சம்பவத்தில் நேர்மறையான விஷயம் என்னவெனில் இஸ்தான்புல் விமான நிலைய ஊழியர்கள் எங்களுக்கு முழு ஒத்துழைப்பு தந்து உதவினர். இதனால் எங்கள் உடமைகளை கண்டறிந்து எங்களிடம் திருப்பி கொடுக்கும் படிவத்தை பூர்த்தி செய்ய முடிந்தது. 130க்கும் மேற்பட்ட இந்தியர்களின் கோபத்திற்கு ஆளாகியுள்ளீர்கள். இவ்வாறு அவர் பதிவிட்டிருந்தார்.

பெரிய விமான நிறுவனங்களுள் ஒன்றான இண்டிகோ, அஜாக்கிரதையாக இருந்த விவகாரம், பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து பயணிகளுக்கு அவர்களின் உடமைகள் விரைவில் வந்து சேரும் என இண்டிகோ விமான நிறுவனம் உறுதியளித்தது.

மூலக்கதை