கர்தார்பூர் சிறப்பு பாதை நவ.9ல் திறப்பு

தினமலர்  தினமலர்
கர்தார்பூர் சிறப்பு பாதை நவ.9ல் திறப்பு

லாகூர்,'கர்தார்பூர் சிறப்பு பாதை வரும் நவம்பர் 9ம் தேதி திறக்கப்படும்' என பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.சீக்கிய மத ஸ்தாபகர் குருநானக் தேவின் சமாதியான கர்தார்பூர் சாஹிப் பாகிஸ்தானில் சர்வதேச எல்லையை ஒட்டி ராவி நதிக்கரையில் அமைந்து உள்ளது. இந்த சமாதிக்கு செல்வதை சீக்கியர்கள் மிகவும் புனிதமாக கருதுகின்றனர்.

குருநானக்கின் 550வது பிறந்த ஆண்டு கொண்டாடப்பட உள்ளது. பாகிஸ்தானில் உள்ள குருநானக் சமாதிக்கு சீக்கியர்கள் எளிதாக செல்லும் வகையில் பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூர் மாவட்டம் தேரா பாபா நானக் நகரிலிருந்து சர்வதேச எல்லை வரை சிறப்பு பாதை அமைக்க மத்திய அரசு முடிவு செய்தது. பாகிஸ்தான் எல்லையிலிருந்து கர்தார்பூர் வரை சாலை அமைக்க அந்நாடும் ஒப்பு கொண்டுள்ளது.இதற்கான பணிகள் நடந்து வருகின்றன. காஷ்மீர் பிரச்னையால் எல்லையில் பதற்றம் நிலவி வரும் நிலையில் பாதை அமைக்கும் பணியில் எந்த பாதிப்பு ஏற்படவில்லை. மேலும் கர்தார்பூர் சாஹிப்புக்கு சீக்கியர்கள் 'விசா' இல்லாமல் செல்லவும் இரு நாடுகளின் ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

இந்நிலையில் பாகிஸ்தான் தரப்பில் இந்த திட்டத்தின் இயக்குனர் அதிப் மஜீத் நேற்று கூறியதாவது:கர்தாப்பூர் சாலை அமைப்பு பணிகள் 86 சதவீதம் முடிந்துவிட்டது. மீதியுள்ள பணிகள் முடிந்து வரும் நவம்பர் 9ல் இந்திய சீக்கியர்களுக்காக இந்த பாதை திறக்கப்படும்.அதன் பின் தினமும் இந்தியாவிலிருந்து 5000 சீக்கியர்கள் இந்த பாதையில் விசா இல்லாமல் செல்ல அனுமதிக்கப்படுவர். இந்த எண்ணிக்கை பின் 10 ஆயிரமாக உயர்த்தப்படும்.இவ்வாறு அவர்கூறினார்.

மூலக்கதை