அறிவிப்பு போதுமா ஆபீசர்? சென்னை முழுவதும் சாலைகள் தோண்டி நாசம்

தினமலர்  தினமலர்
அறிவிப்பு போதுமா ஆபீசர்? சென்னை முழுவதும் சாலைகள் தோண்டி நாசம்

சென்னை : சாலை வெட்டு பணிகளின் போது, கடைப்பிடிக்க வேண்டியவை குறித்து, மாநகராட்சி நீண்ட பட்டியல் வெளியிட்டும், பணி செய்யும் நிறுவனங்கள், அதை கடைப்பிடிப்பதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மாநகராட்சி அதிகாரிகளும், இந்த விஷயத்தில் அலட்சியமாக செயல்படுவதால், சென்னை மாநகர சாலைகள், போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில், மாறி வருகின்றன.சென்னை மாநகராட்சியில், 387.98 கி.மீ., நீளமுள்ள, 472 பேருந்து சாலைகள், 5,204.36 கி.மீ., நீளமுள்ள, 33 ஆயிரத்து, 601 உட்புற சாலைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. சாலை மேம்பாட்டுக்காக, ஆண்டுதோறும், 600 கோடி ரூபாய் வரை, மாநகராட்சி பட்ஜெட்டில், நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

தடுப்புகள்மேலும், சென்னை குடிநீர் மற்றும் கழிவுநீர் அகற்று வாரியம், மின் வாரியம், தொலைபேசி நிறுவனங்களால் மேற்கொள்ளப்படும், சாலை வெட்டு, பள்ளம் தோண்டும் பணிகளுக்கு, அத்துறைகளிடமிருந்து, சாலைகளை சமன் செய்ய, வைப்பு தொகையும் பெறப்படுகிறது.இந்நிலையில், சாலை வெட்டு பணிகள் மேற்கொள்ளும் போது, கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டியவை குறித்து, மாநகராட்சி, ஜூனில், அறிவிப்பு வெளியிட்டது.அதில், சாலை வெட்டு மேற்கொள்ளும் இடத்தில், விபத்து ஏற்படாமல் இருக்க, முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

முன்னெச்சரிக்கை தடுப்புகள், எச்சரிக்கை விளக்குகள், சிவப்பு கொடிகள் போன்றவை, பணி நடைபெறும் இடத்தில், கட்டாயம் பொருத்தப்பட வேண்டும் என, தெரிவிக்கப்பட்டது.மேலும், சாலை வெட்டின் நீளம் மற்றும் அகலம் போன்றவைகள், சாலை வெட்டுக்கு அனுமதிக்கப்பட்ட அளவுகளை மீறி மேற்கொள்ளக் கூடாது.சாலை வெட்டினை சீர் செய்வதற்கு ஏதுவாக இருக்க, சாலை மட்டத்திலிருந்து, 3.5 அடி தாழ்வாக குழாய்களை பதிக்க வேண்டும்.

கழிவுநீர் அடைப்புவிபத்தை தவிர்க்கும் பொருட்டு, கேபிள் இணைப்பு அறையின் மூடியானது, சாலை மட்டத்திற்கு மேலேயோ அல்லது கீழேயோ இருத்தல் கூடாது. இந்த விதியை மீறுவபவர்கள் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, மாநகராட்சி எச்சரித்தது. மாநகராட்சியின், இந்த அறிவிப்பு வரவேற்கத்தக்கது என்றாலும், சாலை வெட்டு பணிக்கு, வைப்பு தொகை பெறப்பட்டும், சாலையை சீரமைத்து, ஒழுங்குப்படுத்துவதில், மாநகராட்சி மெத்தனம் காட்டி வருகிறது.மேலும், மாநகராட்சி அறிவித்த பலவற்றை, சாலை வெட்டு பணிகள் மேற்கொள்ளும் துறைகள் பின்பற்றாத நிலையில், அவர்கள் மீது எந்த நடவடிக்கையும், மாநகராட்சி அதிகாரிகள் எடுப்பதில்லை.

குறிப்பாக, புதிதாக போடப்பட்ட சாலை முதல், அனைத்து சாலைகளிலும், கழிவுநீர் அடைப்பு ஏற்பட்டால், மாநகராட்சியிடம், எவ்வித அனுமதியும் பெறாமல், சாலை தோண்டப்பட்டு, பள்ளமாக்கப்படுகிறது. இதனால், மாநகராட்சியில் உள்ள, அனைத்து சாலைகளும், போக்குவரத்திற்கு பயனற்ற நிலையில் உள்ளன. ஆங்காங்கே, திடீரென உள்ள பள்ளம், மேடு ஆகியவற்றால், இருசக்கர வாகனத்தில் செல்வோர் விபத்துக்கு உள்ளாகின்றனர். அதேபோல், நான்கு சக்கர வாகனங்களும் சேதமடைகின்றன. இதில், இதய கோளாறால் பாதிக்கப்பட்டவர்கள், கருத்தரித்த பெண்கள், அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர்.

பருவ மழை துவங்க உள்ள நிலையில், அதற்கு முன், மாநகராட்சி சாலையின் பள்ளங்களை சீரமைக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இது குறித்து, மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது:சாலை வெட்டு பணிகள்முடிந்தபின், தார் கலவை அல்லது சிமென்ட் கலவை வாயிலாக, சாலை ஒட்டு போடப்படுகிறது. சேதமடைந்துள்ள சாலைகள் கணக்கெடுக்கப்பட்டு, திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு வருகிறது. விரைவில், சாலைகள் அமைப்பதற்கான பணிகள் துவங்கும்.இவ்வாறு, அவர் கூறினார்.

மூலக்கதை