உற்பத்தி இடம் உறுதி சான்று பெறுவதற்கு அலைச்சல் இல்லை!

தினமலர்  தினமலர்
உற்பத்தி இடம் உறுதி சான்று பெறுவதற்கு அலைச்சல் இல்லை!

திருப்பூர்: உற்பத்தி இடம் உறுதிச்சான்று பெறும் நடைமுறை, 'ஆன்லைன்' மயமாக்கப்பட்டுள்ளன. இதனால், சான்று பெறுவதில் ஏற்றுமதியாளருக்கு ஏற்பட்டுவரும் சிக்கல்கள் விலகுகின்றன.பின்தங்கிய, வளரும் நாடுகளிலிருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு, அமெரிக்கா, ஐரோப்பா உள்ளிட்ட வளர்ந்த நாடுகள் வரிச்சலுகைகள் வழங்கு கின்றன. இச்சலுகை, வளர்ந்த நாடுகளின் இறக்குமதியாளர்களுக்கு கிடைக்கும்.
இறக்குமதியாளர்கள் இச்சலுகை பெற, தங்களது நாட்டில் தயாரிக்கப்பட்டது என்பதை உறுதிப்படுத்தும் சான்று அளிக்க வேண்டும்.திருப்பூரில், ஏ.இ.பி.சி.,- ஏற்றுமதியாளர்கள் சங்கம், தொழில்வர்த்தக சபை, டெக்ஸ்டைல் கமிட்டி ஆகியவை, உற்பத்தி இடம் உறுதிச்சான்று அளிக்கின்றன.மூலப்பொருளும் கொள்முதல்; இறக்குமதி செய்த மூலப்பொருள் விவரம் என, அனைத்துவகை ஆவணங்களுடன், இம்மையங்களுக்கு நேரடியாக சென்று, சான்று பெற விண்ணப்பிக்க வேண்டும்.அரசால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் அமைப்புகள், ஆவணங்களை பரிசோதித்து, ஏற்றுமதியாளர்களுக்கு உற்பத்தி இடம் உறுதிச்சான்று வழங்குகின்றன. நேரடியாக விண்ணப்பிப்பதில், ஏராளமான சிக்கல்கள் ஏற்படுகின்றன.
இதனால், இந்த சான்று வழங்கும் நடைமுறைகளை, 'ஆன்லைன்' மயமாக்கவேண்டும் என்பது ஏற்றுமதியாளர்களின் எதிர்பார்ப்பாக இருந்தது.இந்த எதிர்பார்ப்பு தற்போது நிறைவேறியுள்ளது. டில்லியில் நேற்று நடந்த நிகழ்ச்சியில், மத்திய வர்த்தகத்துறை அமைச்சர் பியூஸ்கோயல், டிஜிட்டல் உற்பத்தி இடம் உறுதிச் சான்று வழங்கும் திட்டத்தை துவக்கிவைத்தனர்.
திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க தலைவர் ராஜாசண்முகம் கூறியதாவது:வளர்ந்த நாடுகள், தங்கள் நாட்டு வர்த்தகர்கள், வளரும், பின்தங்கிய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு வரிச் சலுகைகள் வழங்குகின்றன.
பெரும்பாலும், பின்தங்கிய நாடுகளின் பொருட்களுக்கு முழு வரிச்சலுகை; வளரும் நாடுகளின் பொருட்களுக்கு குறிப்பிட்ட சதவீதம் சலுகை அளிக்கப்படுகிறது.இந்த சலுகை, இறக்குமதியாளர்களுக்கு மிகவும் கைகொடுக்கிறது. இவற்றை யெல்லாம் கணக்கிட்டுதான், இறக்குமதியாளர்கள், குறிப்பிட்ட நாட்டு தயாரிப்பு நிறுவனங்களுக்கு ஆர்டர்கள் வழங்குவர்.இறக்குமதியாளர்கள் இச்சலுகை பெறுவதற்கு, உற்பத்தி இடம் உறுதிச்சான்று அவசியம். நேரடியாக சென்று சான்று பெறுவதில், காலதாமதங்கள் ஏற்படுகின்றன.
குறித்த காலத்துக்குள் உற்பத்தி முடிந்தாலும்கூட, சான்று பெறுவதற்கு தாமதம் ஏற்பட்டால், அது ஏற்றுமதியை பாதிக்கும்.தொழில் துறையினரின் சிரமங்களை கருத்தில் கொண்டு, ஆன்லைனில் விண்ணப்பித்து சான்று பெறும் திட்டத்தை மத்திய அரசு கொண்டுவந்துள்ளது.அதனால், சான்று பெறுவதில் ஏற்பட்டுவரும் காலதாமதம் நீங்கும். சான்று பெறுவதற்காக செலவிடும் நேரத்தை, உற்பத்தி சார்ந்த வேறு பணிகளுக்கு செலவிடமுடியும். அரசின் இந்த திட்டம், ஏற்றுமதி வர்த்தகத்தை எளிமைப்படுத்தும் ஓர் அம்சமாகவே உள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.

மூலக்கதை