எப்போது? மதுரையில் அறிவித்த போக்குவரத்து மாற்றம் அமலாவது ... அத்துமீறும் அரசு பஸ்களால் தீராத தலைவலி

தினமலர்  தினமலர்
எப்போது? மதுரையில் அறிவித்த போக்குவரத்து மாற்றம் அமலாவது ... அத்துமீறும் அரசு பஸ்களால் தீராத தலைவலி

மதுரை : மதுரை பெரியார், ஷாப்பிங் காம்பளக்ஸ் பஸ் ஸ்டாண்ட் பணிக்காக அறிவித்த போக்குவரத்து மாற்றத்தை முழுமையாக அமல்படுத்தாததால் கடும் நெரிசல் நிலவுகிறது. அத்துமீறும் அரசு பஸ்களால் வாகன ஓட்டிகளுக்கு தலைவலி தொடர்கிறது.

மாநகராட்சி சார்பில் 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தில் இந்த பஸ் ஸ்டாண்டுகளை இடித்து விட்டு ஒரே பஸ் நிலையமாக கட்டமைக்கும் பணி ரூ.159 கோடியில் நடக்கிறது. இதற்காக டி.பி. ரோடு, மேலவெளிவீதி, டி.பி.கே., ரோடு, கிரைம்பிராஞ்ச், ஹயத்கான் ரோடு ஆகிய 5 இடங்களில் தற்காலிக பஸ் நிறுத்தம் அமைக்கப்பட்டது. இதில் வாடிப்பட்டி, அலங்காநல்லுார், சோழவந்தான் பகுதிக்கு செல்லும் பஸ்களுக்கு டி.பி., ரோட்டில் (மகபூப்பாளையம்) இடம் ஒதுக்கப்பட்டது. ஆனால் இந்த பஸ் நிறுத்தத்தை புறந்தள்ளிவிட்டு, பெரியார் பஸ் ஸ்டாண்டிற்குள்ளேயே பஸ்கள் நின்று செல்கின்றன.

இதனால் இவ்வழியை பயன்படுத்தும் வாகனங்கள் முன்னேறி செல்ல முடியாமல் நிற்பதால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

நெரிசல் அதிகரிக்கும்
பஸ் ஸ்டாண்ட் பணிக்காக மேலவெளி வீதி ஒரு வாரத்தில் மூடப்படும் என ஜூலையில் அறிவிக்கப்பட்டது. இதுவரை அந்த ரோடு மூடப்படவில்லை. ரோடு மூடப்படும் போது ஒட்டுமொத்த வாகனங்களும் பெரியார் பஸ் ஸ்டாண்டிற்குள் வந்து பாலத்தையொட்டி உள்ள பாதை வழியாக செல்லும் போது இன்னும் கடும் நெரிசல் ஏற்படும். தவிர பழைய விரைவு போக்குவரத்துக்கழக டெப்போவும் கடும் நெரிசலுக்கு வித்திடுகிறது.

தற்போது அரசு பஸ்களுக்கு டீசல் நிரப்பும் இடமாக இது மாற்றப்பட்டுள்ளது. பகலில் பஸ்களை அங்கு நிறுத்தி வைக்கின்றனர். இதனால் மேலவெளி வீதியில் கடும் நெரிசல் ஏற்படுகிறது. எனவே டீசல் நிரப்பும் இடத்தை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும். ஆம்னி பஸ்களும் இப்பகுதி வழியே வருவதை தவிர்ப்பது நல்லது. பஸ் ஸ்டாண்டை சுற்றி தொடரும் போக்குவரத்து நெரிசலுக்கு முடிவுகட்ட வேண்டியது அவசியம். மாநகராட்சி, போக்குவரத்து, போலீஸ் அதிகாரிகள் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். உடனடியாக டி.பி., ரோடு தற்காலிக பஸ் நிறுத்தத்தை செயல்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும்.

வேகமாக பஸ் ஸ்டாண்டு பணி நடக்க அனைவரும் ஒத்துழைப்பது அவசியம். பொதுமக்களும் பஸ் ஸ்டாண்டு பணிகள் முடியும் வரை, முடிந்த அளவு இந்த வழியே வாகன போக்குவரத்தை தவிர்ப்பது நலம்.


மூலக்கதை