பும்ராவின் ‘வெள்ளை’ கனவு | செப்டம்பர் 13, 2019

தினமலர்  தினமலர்
பும்ராவின் ‘வெள்ளை’ கனவு | செப்டம்பர் 13, 2019

மும்பை: ‘‘டெஸ்ட் அரங்கில் தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக அறிமுகம் ஆன அந்த தருணம், எனது கனவு நனவானது. தற்போது அணியின் வெற்றிக்கு கைகொடுப்பது திருப்தி தருகிறது,’’ என பும்ரா தெரிவித்தார்.

இந்திய அணி இளம் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா 25. ‘டுவென்டி–20’, ஒருநாள் போட்டிகளில் அசத்தும் இவர், கடந்த 2018ல் தென் ஆப்ரிக்க மண்ணில் டெஸ்டில் அறிமுகம் ஆனார். இதுவரை 12 டெஸ்டில் 62 விக்கெட்டுகள் சாய்த்துள்ளார். 

இர்பான் பதான், ஹர்பஜன் சிங்கிற்கு அடுத்து டெஸ்ட் அரங்கில் ‘ஹாட்ரிக்’ விக்கெட் சாய்த்த மூன்றாவது இந்திய பவுலர் ஆனார் பும்ரா. தற்போது சொந்தமண்ணில் முதன் முறையாக டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்க உள்ள இவர் கூறியது:

என்னைப் பொறுத்தவரையில் டெஸ்ட் கிரிக்கெட் என்பது மிக முக்கியமானது. எப்போதும் இவ்வகை போட்டிகளில் பங்கேற்க வேண்டும், ஏதாவது சாதனை செய்ய வேண்டும் என விரும்புவேன். மற்றபடி ‘டுவென்டி–20’, ஒருநாள் போட்டிகளில் மட்டும் விளையாடும் வீரராக இருக்க விரும்பவில்லை. 

ஏனெனில் முதல்தர போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டுள்ளேன் என்பதால் டெஸ்ட் அரங்கிலும் இதுபோல சாதிக்கலாம் என திட்டமிட்டேன். 

தென் ஆப்ரிக்க மண்ணில் டெஸ்ட் போட்டியில் அறிமுகம் ஆன போது, எனது கனவு நனவானது. முதலில் வெள்ளை சீருடையில் களமிறங்கிய போது சற்று வித்தியாசமான உணர்வு ஏற்பட்டது. தற்போது இரண்டு ஆண்டுகள் சென்று விட்டன. 12 டெஸ்டில் தான் பங்கேற்றுள்ளேன். கொஞ்சம் கொஞ்சமாக அணியின் வெற்றிக்கு கைகொடுப்பது திருப்தி தருகிறது.

பொதுவாக பந்து வீச்சின் போது பெரும்பாலும் ‘அவுட் சுவிங்’ செய்வேன். ஆனால் இதை அதிகம் பயன்படுத்தியது இல்லை. இங்கிலாந்து மண்ணில் இதுபோல வீசிய போது, அதிக நம்பிக்கை கிடைத்தது. தற்போது அதிக டெஸ்டில் பங்கேற்பதால், கூடுதல் உற்சாகம் ஏற்பட்டுள்ளது. புதுவிதமான பந்து வீச்சு முறை டெஸ்ட் போட்டிகளில் பயன்படுத்தி பார்க்க முடிகிறது.

இவ்வாறு பும்ரா கூறினார்.

மூலக்கதை