முதல் வெற்றி பெறுமா இந்தியா * நாளை ‘டுவென்டி–20’ சவால் | செப்டம்பர் 13, 2019

தினமலர்  தினமலர்
முதல் வெற்றி பெறுமா இந்தியா * நாளை ‘டுவென்டி–20’ சவால் | செப்டம்பர் 13, 2019

தரம்சாலா: இந்தியா, தென் ஆப்ரிக்க அணிகள் மோதும் மூன்று போட்டிகள் கொண்ட ‘டுவென்டி–20’ தொடர் நாளை துவங்குகிறது. இதில் தென் ஆப்ரிக்காவை சாய்த்து, சொந்தமண்ணில் இந்தியா முதல் வெற்றி பெறுமா என எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இந்தியா வந்துள்ள தென் ஆப்ரிக்க அணி மூன்று போட்டிகள் கொண்ட ‘டுவென்டி–20’ தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி நாளை, இயற்கை எழில் கொஞ்சும் இமாச்சல பிரதேசத்தின் தரம்சாலா மைதானத்தில் நடக்கவுள்ளது. அடுத்த இரு போட்டிகள் செப். 18 (மொகாலி), செப். 22ல் (பெங்களூரு) நடக்கவுள்ளன.

இந்தியா, தென் ஆப்ரிக்க அணிகள் 14 ‘டுவென்டி–20’ போட்டிகளில் மோதின. இதில் இந்தியா 8, தென் ஆப்ரிக்கா 5ல் வெற்றி பெற்றன. ஒரு போட்டி மழையால் கைவிடப்பட்டது. அதேநேரம் இந்திய அணி, தனது சொந்தமண்ணில் தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக மோதிய 3 போட்டிகளில் (1 ரத்து, 2 தோல்வி) ஒன்றில் கூட வெல்லவில்லை. 

சமீபத்திய விண்டீஸ் தொடரில் ‘டுவென்டி–20’ (3–0), ஒருநாள் (2–0), டெஸ்ட் (2–0) என மூன்று வித கிரிக்கெட்டிலும் முத்திரை பதித்தது இந்தியா. இதே வேகத்தில் தென் ஆப்ரிக்காவை எதிர்கொண்டு இந்திய அணி சாதிக்க வேண்டும் என ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கு கோஹ்லி, ரோகித் உள்ளிட்ட வீரர்கள் கைகொடுப்பர் என நம்பலாம்.

மூலக்கதை