கோஹ்லி ‘ஆட்டோகிராப்’ அனுபவம் | செப்டம்பர் 13, 2019

தினமலர்  தினமலர்
கோஹ்லி ‘ஆட்டோகிராப்’ அனுபவம் | செப்டம்பர் 13, 2019

புதுடில்லி: சிறு வயதில் கேலரி ‘கேட்டில்’ தொங்கிக் கொண்டு, ஸ்ரீநாத்திடம் ‘ஆட்டோகிராப்’ கேட்டதாக தெரிவித்துள்ளார் கோஹ்லி. 

இந்திய அணி கேப்டன் கோஹ்லி 30. டில்லியை சேர்ந்தவர். கிரிக்கெட்டில் இவரது சாதனைகளை கவுரவிக்கும் வகையில் டில்லி பெரோஷா கோட்லா மைதானத்தின் ஒரு பகுதி ‘ஸ்டாண்டுக்கு’ கோஹ்லி பெயர் சூட்டப்பட்டது. 

இந்நிகழ்ச்சியில் கோஹ்லி கூறியது:

கடந்த 2000ம் ஆண்டு டில்லியில் இந்தியா, ஜிம்பாப்வே அணிகள் மோதின. எனது சிறுவயது பயிற்சியாளர் ராஜ்குமார் ஷர்மா எனக்கு இரண்டு டிக்கெட்டுகள் வாங்கி தந்தார். அப்போது கேலரியில் உள்ள ‘கிரில் கேட்டில்’ தொங்கிக் கொண்டு, இந்திய வீரர் ஸ்ரீநாத்திடம் ‘ஆட்டோகிராப்’ தருமாறு கேட்டேன். இது என் மனதில் மறக்க முடியாத நினைவாக உள்ளது.

இப்போது அதே மைதானத்தில் உள்ள ‘பெவிலியனுக்கு’ எனது பெயரை வைத்திருப்பது கனவாக உள்ளது. இது எனக்கு கிடைத்த மிகப்பெரிய பெருமை. இப்படி ஒரு விழாவில் நான் கவுரவிக்கப்படுவேன் என ஒருபோதும் நான் நினைத்தது இல்லை. எனது மனைவி, சகோதரர் மற்றும் குடும்பத்தினர் இங்கு வந்துள்ளனர். இவர்கள் முன் எப்படி பேசுவது என்றே தெரியவில்லை.

இவ்வாறு கோஹ்லி தெரிவித்தார்.

மூலக்கதை