ஆர்ச்சர் ‘வேகத்தில்’ அசத்தல் | செப்டம்பர் 13, 2019

தினமலர்  தினமலர்
ஆர்ச்சர் ‘வேகத்தில்’ அசத்தல் | செப்டம்பர் 13, 2019

ஓவல்: ஐந்தாவது ஆஷஸ் டெஸ்டில் இங்கிலாந்தின் ஆர்ச்சர் ‘வேகத்தில்’ அசத்தினார். 

இங்கிலாந்து சென்றுள்ள ஆஸ்திரேலியா அணி ஐந்து போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் நான்கு போட்டிகள் முடிவில், தொடரில் ஆஸ்திரேலியா 2–1 என முன்னிலையில் உள்ளது. ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் லண்டன், ஓவலில் நடக்கிறது. முதல் நாள் ஆட்ட நேர முடிவில், இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 8 விக்கெட்டுக்கு 271 ரன்கள் எடுத்திருந்தது.  நேற்று இரண்டாம் நாள் ஆட்டம் நடந்தது. கம்மின்ஸ் ‘வேகத்தில்’ பட்லர் (70) அவுட்டானார். அடுத்த ஓவரில் லீச்சை (21) வெளியேற்றிய, மிட்சல் மார்ஷ் ஐந்தாவது விக்கெட்டை வீழ்த்தினார். இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 294 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

ஸ்மித் அரை சதம்

முதல் இன்னிங்சை துவக்கிய ஆஸ்திரேலிய அணிக்கு வார்னர், மார்கஸ் ஹாரிஸ் ஜோடி மீண்டும் மோசமான துவக்கம் தந்தது. ஆர்ச்சர் வீசிய ஆட்டத்தின் இரண்டாவது ஓவரில் வார்னர் (5) ஆட்டமிழந்தார். மீண்டும் வந்த ஆர்ச்சர், இம்முறை ஹாரிசை (3) வெளியேற்றினார். இதன்பின், லபுசேன், ஸ்டீவ் ஸ்மித் வழக்கம்போல நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். மூன்றாவது விக்கெட்டுக்கு 69 ரன்கள் சேர்த்தபோது, ஆர்ச்சர் பந்தில் லபுசேன் (48) திரும்பினார். மாத்யூ வேட் (19) விரைவில் அவுட்டானார். அடுத்தடுத்து விக்கெட் வீழ்ந்தாலும், வழக்கம்போல ஸ்மித் எதிரணி பந்துவீச்சை எளிதாக சமாளித்தார். 

தொடர்ந்து ஆதிக்கம் செலுத்திய இவர் டெஸ்ட் அரங்கில் 27வது அரை சதம் அடித்தார். ஆர்ச்சர் பந்தில் மிட்சல் மார்ஷ் (17) அவுட்டானார். கரான் பந்துவீச்சில் கேப்டன் பெய்ன் (1), கம்மின்ஸ் (0) அவுட்டாகினார். ஸ்மித் 80 ரன்களில் ஆட்டமிழந்தார். மற்றவர்கள் ஏமாற்ற, ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 225 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இங்கிலாந்து சார்பில் அதிகபட்சமாக ஆர்ச்சர் 6 விக்கெட் வீழ்த்தினார்.

ஆட்ட நேர முடிவில், இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்சில் விக்கெட் இழப்பின்றி, 9 ரன்கள் எடுத்து, 78 ரன்கள் முன்னிலை பெற்றிருந்தது. பர்ன்ஸ் (4), டென்லே (1) அவுட்டாகாமல் இருந்தனர்.

வார்னர் சோகம்

ஆஷஸ் தொடரில் வார்னர் தொடர்ந்து சொதப்புகிறார். நேற்றும் ஏமாற்றிய இவர், ஒரே டெஸ்ட் தொடரில் அதிக முறை (8) ஒற்றை இலக்கில் ஆட்டமிழந்த முதல் துவக்க வீரர் என்ற மோசமான சாதனை படைத்தார். இதற்கு முன், இந்தியாவின் அனுஷ்மான் கெய்க்வாட், இங்கிலாந்தின் மைக் ஆதர்டன் தலா 7 முறை இப்படி அவுட்டாகி இருந்தனர்.

10

நேற்று, அபாரமாக செயல்பட்ட ஸ்டீவ் ஸ்மித் இங்கிலாந்து அணிக்கு (2017-19) எதிராக தொடர்ந்து 10வது அரை சதம் அடித்தார். இதன் மூலம், டெஸ்ட் அரங்கில் ஒரே அணிக்கு எதிராக இந்த இலக்கை எட்டிய முதல் வீரரானார். இதற்கு முன், பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் இன்சமாம் (2001-06) இங்கிலாந்துக்கு எதிராக 9 முறை இந்த சாதனை படைத்திருந்தார்.

 

மூலக்கதை