'சூதாட்ட புயலில்' டி.என்.பி.எல்.,

தினமலர்  தினமலர்
சூதாட்ட புயலில் டி.என்.பி.எல்.,

சென்னை: தமிழகத்தில் நடக்கும் டி.என்.பி.எல்., தொடரை சூதாட்ட மேகம் சூழ்ந்து உள்ளது.


ஐ.பி.எல்., பாணியில் தமிழக கிரிக்கெட் சங்கத்தின் சார்பில் தமிழக பிரிமியர் லீக் (டி.என்.பி.எல்.,) 'டுவென்டி-20' தொடர் நடத்தப்படுகிறது. நான்கு ஆண்டுக்கு முன் தோனி, இத்தொடரை துவக்கி வைத்தார். கடந்த மாதம் முடிந்த இதன் நான்காவது சீசனில் சேப்பாக்கம் அணி கோப்பை வென்றது.

இதனிடையே சூதாட்ட புக்கிகள், அணி உரிமையாளர்களுடன் இணைந்து, அணியை கட்டுப்படுத்தி போட்டியின் முடிவுகளை மாற்றியதாக தற்போது புகார் எழுந்துள்ளது. இந்த புக்கிகளுடன் தொடர்புடைய பலர், பல்வேறு அணிகளில் உள்ளதாக தெரிகிறது. புக்கிகள், வேறு சிலர் இடையே ஏற்பட்ட பணத்தகராறில் இந்த சூதாட்ட விபரம் வெளியே தெரிந்தது என ஆங்கில பத்திரிகை செய்தி வெளியிட்டது.


இதுகுறித்து இந்திய கிரிக்கெட் போர்டின் (பி.சி.சி.ஐ.,) ஊழல் தடுப்பு பிரிவு விசாரணையில் இறங்கியுள்ளது. இதன் தலைவர் அஜித் சிங் கூறியது: சில வீரர்கள் தெரிவித்த தகவல்கள் அடிப்படையில் யார் அவர்களை அணுகியது என்ற விபரங்களை சேகரித்து வருகிறோம். எப்போது, எந்த சூழ்நிலையில் இது நடந்தது என விசாரிக்கிறோம். 'வாட்ஸ் ஆப்' மூலம் செய்திகள் அனுப்பியுள்ளனர். இதனால் யார் அந்த நபர்கள் என முகவரியை தேடுகிறோம். மற்றபடி இதுவரை அணி உரிமையாளர்கள் யாரிடமும் விசாரணை நடத்தப்படவில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார். இந்த சூதாட்டம் குறித்து சட்ட ஆலோசனைகள் பெற்ற பின், பி.சி.சி.ஐ., ஊழல் தடுப்பு பிரிவு வழக்கு பதிய உள்ளதாக தெரிகிறது.

தொடர்பு எப்படி?


கடந்த 2017 ல், ராஜ்புதனா கிரிக்கெட் லீக் தொடரில் நடந்த சூதாட்டம் தொடர்பாக 14 பேரை ஜெய்ப்பூர் போலீஸ் கைது செய்தனர். இதில் ஒருவருக்கு, டி.என்.பி.எல்., அணி உரிமையாளருடன் தொடர்புஉள்ளது தெரிந்தது.

* சென்னை, ஆக்ரா, ஜெய்ப்பூரின் ஐந்து நட்சத்திர ஓட்டலில் நடந்த பல்வேறு சந்திப்புக்குப் பின், அணி உரிமையாளருக்கு ரூ. 4 கோடி வரை தரப்பட்டுள்ளதாம்.

* டி.என்.பி.எல்., பயிற்சியாளர் ஒருவருக்கு வைர நகை 'செட்' பரிசு தரப்பட்டது. இவருக்கு புக்கிகள் தரப்பில் ரூ. 25 லட்சம் கொடுக்கப்பட்டது. எனிலும் அந்த பயிற்சியாளர் கார் கேட்டதாகவும் கூறப்படுகிறது.

* இந்த பயிற்சியாளர், 'எப்படி, எத்தனை ரன்கள் எடுக்க வேண்டும்' என வீரர்களுக்கு 'அட்வைஸ்' செய்வார் என புக்கிகள் தெரிவித்துள்ளனர். இதனால் கடந்த ஏப்ரல் மாதம் முதல் டி.என்.பி.எல்., தொடரை ஊழல் தடுப்புக்குழு கண்காணித்து வந்துள்ளது.


டி.என்.சி.ஏ., விளக்கம்:


டி.என்.பி.எல்., தொடர் கட்டுப்பாட்டுக்குழு தலைவர் பி.எஸ்.ராமன் வெளியிட்ட அறிக்கையில்,''கடந்த 2016ல் தொடர் துவங்கப்பட்டது முதல் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,), பி.சி.சி.ஐ., ஊழல் தடுப்பு விதிகள் கடுமையாக பின்பற்றப்படுகிறது. சமீபத்திய தொடரை, புதிய ஊழல் தடுப்பு விதிப்படி, குழுவினர் நேரடியாக கண்காணித்தனர். தமிழக கிரிக்கெட் சங்கத்தின் (டி.என்.சி.ஏ.,) சார்பிலும் தனியாக குழு அமைக்கப்பட்டது. டி.என்.சி.ஏ., குழு அறிக்கை தரும் வரையில், இப்புகார் குறித்து எவ்வித தகவலும் தெரிவிக்கப்பட மாட்டாது,'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை