பாரா கிரிக்கெட் வீரர்களை அரசு அங்கீகரிக்குமா

தினமலர்  தினமலர்
பாரா கிரிக்கெட் வீரர்களை அரசு அங்கீகரிக்குமா

மதுரை: மதுரை பாரா கிரிக்கெட் வீரர் 'சச்சின்' சிவா 30, செப்., 22ல் நேபாளத்தில் நடக்கும் சர்வதேச பாரா கிரிக்கெட் போட்டிக்கு தேர்வாகி உள்ளார்.இவர் தமிழக அணி சார்பில் விளையாடிய 120 போட்டிகளில் 80 போட்டிகளில் வென்றுள்ளார்.

2018ல் மேற்குவங்க அணிக்கு எதிராக விளையாடி 64 பந்துகளில் 115 ரன்களை எடுத்து 'நாட் அவுட் பேட்ஸ்மேன்' என பெயர் பெற்றார். இது தேசிய அளவில் டி-20 போட்டியில் பாரா கிரிக்கெட் வீரர் நிகழ்த்திய சாதனையாகும்.

சச்சின் சிவா கூறியதாவது: இங்கிலாந்தில் சமீபத்தில் நடந்த பாரா கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி கோப்பை வென்றது. அந்த போட்டிக்கு தேர்வாகிய நான் சில காரணங்களால் பங்கேற்கவில்லை. 2011ல் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா வென்றதை போல தான் இன்று பாரா கிரிக்கெட் போட்டியில் வென்றுள்ளோம். ஆனால், இந்த வெற்றி குறித்து மத்திய, மாநில அரசுகள் பாராட்டவில்லை. பரிசு, ஊக்கத்தொகை, சான்றிதழ் கொடுத்து அங்கீகரிக்கவில்லை. மாற்றுத்திறன் கிரிக்கெட் வீரர்கள் பயிற்சி பெற போதிய வசதிகள் இல்லாததால் வீரர்களால் திறமையை வெளிப்படுத்த முடியவில்லை.

அம்மா தமிழரசி மளிகை கடை வைத்துஉள்ளார். அப்பா செல்லம் டிரைவராக இருக்கிறார். மனைவி, மகன், மகள் உள்ளனர். பிளக்ஸ் பேனர் டிசைனராக இருந்த நான் அடிக்கடி கிரிக்கெட் போட்டிக்கு சென்றதால் அந்த வேலை பறிபோனது. பொருளாதார வசதி இல்லாததால் என்னால் முக்கிய போட்டிகளில் பங்கேற்க முடியவில்லை. எனவே அரசு, என்னை போன்ற வீரர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள், மாதந்தோறும் உதவித்தொகை வழங்க வேண்டும். பிற வீரர்கள் போல எங்களையும் அங்கீகரிக்க வேண்டும், என்றார்.

இவரை வாழ்த்த 96777 79277.

மூலக்கதை