குஜராத்தில் மோடி..! இன்று பிறந்த நாள் கொண்டாட்டம்

தினமலர்  தினமலர்
குஜராத்தில் மோடி..! இன்று பிறந்த நாள் கொண்டாட்டம்

ஆமதாபாத்: பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த நாள் இன்று (செப்.17) , நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்நாளில், குஜராத்தின் முக்கிய அணையான சர்தார் சரோவர் அணை, 138.68 மீட்டர் என்ற முழு கொள்ளளவை எட்டுவதை பார்வையிட குஜராத் வந்தார் மோடி.


பிரதமர் மோடி தனது 69வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். இதற்காக நேற்று (செப்.,16) இரவு 11 மணிக்கு குஜராத் மாநிலம் ஆமதாபாத் நகருக்கு வந்தார். விமானநிலையத்தில் பிரதமர் மோடிக்கு சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது. அவரை மாநில முதல்வரான விஜய் ரூபானி, கவர்னர் ஆச்சார்யா தேவ்ரத் மற்றும் மாநில அமைச்சர்களும் தொண்டர்களும் வரவேற்றனர். விமானநிலையத்திற்கு வெளியில் பா.ஜ.,வினர் மோடி வாழ்க போன்ற கோஷமிட்டு மோடியை வாழ்த்தினர். ஆமதாபாத் நகரம் முழுவதும் பிரதமரை வரவேற்றும் வாழ்த்தியும் விளம்பர பதாகைகள் வைக்கப்பட்டிருந்தன.


சர்தார் சரோவர் அணை


இன்று தன் தாய் தாயார் ஹீராபென் மோடியின் ஆசீர்வாதங்களைப் பெற்று தனது நாளைத் தொடங்க உள்ளார். மேலும் குஜராத் மாநிலத்தில் பல செயல்திட்டங்களை மோடி துவக்க உள்ளார். குஜராத்தின் நர்மதா மாவட்டத்தில் உள்ள கெவடியாவில் இருக்கும் முக்கிய அணையான சர்தார் சரோவர் அணையை பார்வையிட இருக்கிறார். சர்தார் சரோவர் அணை, முழு கொள்ளளவை எட்டுவது, வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வு. சர்தார் சரோவர் அணை அதன் முழுத் திறனுக்கும் நிரப்பப்படுவதைக் குறிக்கும் வகையில் மாநிலம் முழுவதும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 'நமாமி தேவி நர்மதே திருவிழா'வில் அவர் கலந்து கொண்டு நர்மதா ஆர்த்தியை நிகழ்த்துவார்.

சுற்றுலா மேம்பாடு


மேலும் நர்மதா மாவட்டத்தில் சுற்றுலாவை மேம்படுத்துவதற்காக அணையின் அருகே கட்டப்பட்ட ஜங்கிள் சஃபாரி மற்றும் சுற்றுலா பூங்காவின் உயர் அதிகாரிகளையும் பிரதமர் மோடி சந்திப்பார். பின்னர் பிரதமர் மோடி தனது பிறந்தநாளை முன்னிட்டு மாவட்டத்தில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் உரையாற்றவுள்ளார். இதன் பின், நர்மதாவின் கெவாடியாவில் உள்ள கருடேஷ்வர் தத் மந்திருக்குச் சென்று பிரார்த்தனை செய்வார். மதியம் 12 மணிக்கு டில்லிக்கு புறப்படுவார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிரதமர் மோடியின் பிறந்தநாளை பா.ஜ.,வினர் ' சேவா சப்தா ' என நாடு முழுவதும் கொண்டாட உள்ளனர். இந்த வாரம் முழுவதும் சமூக சேவைகளில் ஈடுபடவும் திட்டமிட்டுள்ளனர். இதில் பா.ஜ., முக்கிய தலைவர்களும், தொண்டர்களும் கலந்து கொள்ள உள்ளனர்.

மூலக்கதை