அமெரிக்காவில் இந்தியர்கள் நிகழ்ச்சியில் பிரதமர் மோடியுடன், அதிபர் ட்ரம்ப் பங்கேற்பு: வெள்ளை மாளிகை உறுதி

தினகரன்  தினகரன்
அமெரிக்காவில் இந்தியர்கள் நிகழ்ச்சியில் பிரதமர் மோடியுடன், அதிபர் ட்ரம்ப் பங்கேற்பு: வெள்ளை மாளிகை உறுதி

வாஷிங்டன்: அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் வரும் 22-ம் தேதி இந்தியர்கள் சார்பில் நடக்கும் ஹவ்டி மோடி நிகழ்ச்சியில் பிரதமர் மோடியுடன், அமெரிக்க அதிபர் டொன்ல்ட் ட்ரம்பும் பங்கேற்கிறார் என்பதை வெள்ளை மாளிகை உறுதிசெய்துள்ளது. முதல்முறையாக இரு மிகப்பெரும் ஜனநாயக நாட்டின் தலைவர்கள் ஒரேமேடையில் தோன்றி இருவரும் இரு நாட்டு மக்களுக்கு உரையாற்றுவது இதுதான் முதல்முறையாகும். அமெரிக்காவுக்கு 7 நாட்கள் பயணமாக வரும் 21-ம் தேதி பிரதமர் மோடி இந்தியாவில் இருந்து செல்ல இருக்கிறார். ஐ.நா. பொதுச்சபையில் உரையாற்றும் முன்பாக பிரதமர் மோடி பல்வேறு நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளார். அதில் முக்கியமானது ஹூஸ்டன் நகரில் வரும் 22-ம் தேதி அமெரிக்க இந்தியர்கள் சார்பில் நடத்தப்படும் நிகழ்ச்சியாகும். இதில் அமெரிக்க இந்தியர்கள் மத்தியில் பிரதமர் மோடி உரையாற்ற உள்ளார்.\'ஹவ்டி மோடி\' அதாவது ஆங்கிலத்தில் \'ஹவ் ஆர் யு மோடி\' என்பதன் சுருக்கமாக ஹவ்டி மோடி என்று நிகழ்ச்சிக்கு பெயரிடப்பட்டுள்ளது. ஹூஸ்டன் நகரில் உள்ள என்ஆர்ஜி அரங்கில் நடக்கும் இந்த நிகழ்ச்சியில் ஏறக்குறைய 50 ஆயிரம் இந்தியர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு முன் கடந்த 2014-ம் ஆண்டு நியூயார்க்கில் மேடிஸன் சதுக்கத்தி்ல் நடந்த கூட்டத்தில் கூட இந்த அளவுக்கு இந்தியர்கள் பங்கேற்கவில்லை. ஆனால், இந்த முறை இந்தியர்கள் எப்போதும் இல்லாத அளவுக்கு 50 ஆயிரம் பேர் பங்கேற்பார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்தியர்களுடன் சேர்ந்து இந்த முறை அமெரிக்காவின் 60 முக்கிய எம்.பி.க்கள், பல்வேறு மாநில ஆளுநர்கள், செனட் பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர். எனவே அமெரிக்காவில் இந்தியர்கள் சார்பில் நடத்தப்பட்ட விழாக்களிலேயே மிகப்பெரிய விழாவாக இந்நிகழ்ச்சி  அமையும்என எதிர்ப்பார்க்கப்படுகிறது. அமெரிக்க எம்.பி.க்கள், வர்த்தக தலைவர்கள், பிரதிநிதிகள் என ஏராளமானோர் வருகை தர உள்ளனர். இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடியுடன், அதிபர் ட்ரம்ப் பங்கேற்பார் என்று செய்திகள் வெளியான நிலையில் அது உறுதி செய்யப்படாமல் இருந்து வந்தது. ஆனால், அதுகுறித்து நிருபர்கள் வெள்ளைமாளிகை நிர்வாகத்திடம் கேள்வி எழுப்பியபோது அதிபர் ட்ரம்ப் பங்கேற்பு உறுதி எனத் தெரிவிக்கப்பட்டது.வெள்ளை மாளிகையின் செயலாளர் ஸ்டெபானே கிரீஸம் வெளியிட்ட அறிக்கையில்,  பிரதமர் மோடியும், அதிபர் ட்ரம்பும் சேர்ந்து ஒரேமேடையில் தோன்ற இருப்பது இந்தியா, அமெரிக்க மக்களுக்கு இடையிலான உறவை வலிமைப்படுத்த மிகச்சிறந்த வாய்ப்பாகும். உலகின் மிகப்பழையான நட்பு நாடு, மிகப்பெரிய ஜனநாயக நாடு இந்தியா என்பதை மீண்டும் வலியுறுத்த இது சிறந்த வாய்ப்பாக அமையும் என்று ஸ்டெபானே கிரீஸம் கூறினார். அதிபர் ட்ரம்பும், பிரதமர் மோடியும் இந்த சந்திப்பின் மூலம் எரிசக்தி, மற்றும் வர்த்தக உறவு அடுத்த கட்டத்துக்கு செல்லும். இந்த நிகழ்ச்சியில் அமெரிக்க ஆயிரக்கணக்கான அமெரிக்க இந்தியர்கள் மத்தியில் அதிபர் ட்ரம்ப் உரையாற்ற உள்ளது இதுதான் முதல்முறையாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.அமெரிக்காவுக்கான இந்தியத் தூதர் ஹர்ஸ வர்தன் ஸ்ரிங்கலா கூறுகையில்,  ஹவ்டி மோடி நிகழ்ச்சியில் வரலாற்று நிகழ்ச்சியாகவும் இதுவரை நடந்திராத வகையில் சிறப்பான நிகழ்ச்சியாக இருக்கும். இந்தியாவுக்கும், அமெரி்ககாவுக்கும் இடையிலான வலிமையான நட்புறவை, கூட்டறவை இந்த நிகழ்ச்சி எடுத்துக்காட்டுகிறது எனத் இந்தியத் தூதர் ஹர்ஸ வர்தன் ஸ்ரிங்கலா தெரிவித்துள்ளார். கடந்த மாதம் பிரான்ஸில் ஜி7 மாநாட்டில் பிரதமர் மோடியும், அதிபர் ட்ரம்பும் சந்தித்துப் பேசினார்கள். அப்போது ஹூஸ்டன் நகரில் நடக்கும் நிகழ்ச்சியில் அதிபர் ட்ரம்ப் பங்கேற்க வேண்டும் என்று பிரதமர் மோடி கோரிக்கை விடுத்துள்ளார். அந்த அழைப்பை அதிபர் ட்ரம்ப் ஏற்றுள்ளார் என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

மூலக்கதை