பிரதமர் மோடி நிகழ்ச்சியில் டிரம்ப் பங்கேற்க வாய்ப்பு

தினமலர்  தினமலர்
பிரதமர் மோடி நிகழ்ச்சியில் டிரம்ப் பங்கேற்க வாய்ப்பு

வாஷிங்டன்: அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில், பிரதமர் மோடி பங்கேற்கும் கூட்டத்தில், அமெரிக்க அதிபர், டிரம்ப் கலந்து கொள்வார் என, எதிர்பார்க்கப்படுகிறது.

ஐக்கிய நாடுகள் சபையின், 74வது ஆண்டு கூட்டம், அமெரிக்காவின் நியூயார்க் நகரில், வரும், 24 முதல், 30ம் தேதி வரை நடக்கிறது. இதற்காக, 21ல் அமெரிக்காவுக்கு, பிரதமர் மோடி செல்கிறார். 22ம் தேதி, டெக்சாஸ் மாகாணத்தில், அமெரிக்க வாழ் இந்தியர்களால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்ச்சியில், பிரதமர் மோடி பங்கேற்கிறார்.இந்த நிகழ்ச்சியில், 50 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பங்கேற்பர் என, எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கூட்டத்தில், மோடியுடன் இணைந்து, அமெரிக்க அதிபர் டிரம்பும், மேடை ஏறுவார் என கூறப்படுகிறது.

இது குறித்து, அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது. காஷ்மீர் விவகாரத்தில், அமெரிக்க, எம்.பி.,க்கள் கவலை தெரிவித்துள்ள நிலையில், இந்த கூட்டத்தில் டிரம்ப் பங்கேற்பது, மோடிக்கு தன் ஆதரவை வெளிப்படுத்தும் செயலாக கருதப்படுகிறது.ஐ.நா., பொதுச் சபை கூட்டத்தில், 27ம் தேதி உரையாற்றும் மோடி, டிரம்பையும் சந்தித்து பேச திட்டமிட்டுள்ளார். அப்போது, காஷ்மீர் பிரச்னை உட்பட பல பிரச்னைகள் பற்றியும், இரு தரப்பு உறவுகள் பற்றியும், இருவரும் பேசுவர் என, தெரிகிறது.

மூலக்கதை