எண்ணெய் வயலில் தாக்குதல்; சவுதியின் 'சப்ளை' பாதிப்பு

தினமலர்  தினமலர்
எண்ணெய் வயலில் தாக்குதல்; சவுதியின் சப்ளை பாதிப்பு

துபாய் : மேற்காசிய நாடான, சவுதி அரேபியாவின் மிகப் பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் நடத்தப்பட்ட தாக்குதலால், அதன் உற்பத்தி, 50 சதவீதம் பாதிக்கப்பட்டுள்ளது.

சவுதி அரேபிய அரசின், 'அரம்கோ' என்ற எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனத்துக்கு சொந்தமான, 'அப்காகிக்' எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மற்றும் அதன் அருகில் உள்ள, 'குராயிஸ்' எண்ணெய் வயல்களில், நேற்று முன்தினம் தாக்குதல் நடத்தப்பட்டது.சிறிய ரக விமானம்ஏமன் நாட்டில், அரசுக்கு எதிராக, ஹவுதி பயங்கரவாத அமைப்பு போராடி வருகிறது. இங்கு, அரசு படைகளுக்கு ஆதரவாக, சவுதி அரேபிய அரசு செயல்பட்டு வருகிறது. அதற்கு பழிவாங்கும் வகையில், சவுதி அரேபியாவின் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில், 'ட்ரோன்' எனப்படும், ஆளில்லா சிறிய ரக விமானம் மூலம் தாக்குதல் நடத்தியதாக, ஹவுதி பொறுப்பேற்றுள்ளது.

இந்த ஆலையில், நாளொன்றுக்கு, 70 லட்சம் பீப்பாய் எண்ணெய் சுத்திகரிக்கும் வசதி உள்ளது. இந்த தாக்குதலால் ஏற்பட்ட பயங்கர தீயில், ஆலையில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதையடுத்து நேற்று, 13 லட்சம் பேரல்கள் மட்டுமே உற்பத்தி நடந்ததாகக் கூறப்படுகிறது.அதையடுத்து, மற்ற நாடுகளுக்கான ஏற்றுமதியில் தொய்வு ஏற்பட்டது. அவசர தேவைக்காக வைக்கப்பட்டுள்ள பேரல்கள் மூலம், இது ஈடு செய்யப்பட்டதாக, அரம்கோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், ஈரான் தான் இந்த தாக்குதலை நடத்தியுள்ளதாக, அமெரிக்கா குற்றம்சாட்டியுள்ளது. குற்றச்சாட்டுஈரானுடனான அணு ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகியது. அதைத் தொடர்ந்து, இரு நாடுகளுக்கும் இடையே பதற்றம் நிலவி வருகிறது. இந்த நிலையில், தன் எண்ணெய் வர்த்தகத்துக்காக, சவுதி அரேபியா மீது, ஈரான் தாக்குதல் நடத்திஉள்ளதாக, அமெரிக்கா குற்றஞ்சாட்டியுள்ளது.

'ஏமனில், ஹவுதி படைகளுக்கு ஆதரவாக, ஈரான் உள்ளது. அதனால், ஹவுதி படைகளுக்கு, ட்ரோன்களை அளித்துள்ளதும், ஈரான் தான்' என்றும், அமெரிக்கா கூறியுள்ளது.இந்த தாக்குதலைத் தொடர்ந்து, வளைகுடா பகுதியில் பதற்றம் நிலவுகிறது.

மூலக்கதை