கேரளாவில் ஓட்டலில் மாயமானவர்கள் ஈரான் நாட்டு தீவிரவாதிகள் என சந்தேகம்: தேடுதல் வேட்டையில் உளவுத்துறை

தினகரன்  தினகரன்
கேரளாவில் ஓட்டலில் மாயமானவர்கள் ஈரான் நாட்டு தீவிரவாதிகள் என சந்தேகம்: தேடுதல் வேட்டையில் உளவுத்துறை

திருவனந்தபுரம்: கேரள  மாநிலத்தில் உள்ள ஓட்டலில் இருந்து மாயமானவர்கள் ஈரான் நாட்டைச் சேர்ந்த  தீவிரவாதிகளாக இருக்கலாம் என்ற சந்தேகம் போலீசாருக்கு எழுந்து இருக்கிறது.  இதையடுத்து அவர்களை தேடும் பணியில் உளவுத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். கேரளாவில் கொல்லம் அருகே குண்டரா  பகுதிக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு ஒரு வெளிநாட்டு தம்பதி காரில்  வந்தனர். அவர்கள் அந்த பகுதியில் உள்ள ஒரு  கடைக்கு சென்று சோப்பு வாங்கினர். ₹2,000க்கு சில்லரை வேண்டும் என்று கடை உரிமையாளரிடம் கேட்டு உள்ளனர். கடை  உரிமையாளரும் தனது பேக்கில் இருந்து சில்லரை எடுத்து ெகாண்டிருந்தார்.  அப்போது திடீரென அந்த வெளிநாட்டு தம்பதி பேக்கை பறித்துக்கொண்டு தப்பி  ஓடினர். இதையடுத்து அந்த பகுதியை சேர்ந்தவர்கள் வெளிநாட்டு தம்பதியை  விரட்டி பிடித்து ேபாலீசில் ஒப்படைத்தனர்.போலீசார்  அந்த தம்பதியிடம் விசாரணை நடத்தியபோது அவர்கள் ஈரான் நாட்டைச் சேர்ந்த  ஆமீர் (27), அவரது மனைவி நஸ்ரின் (20) என்பது தெரியவந்தது. இவர்கள் இதேபோல  பல இடங்களில் பலரிடம் இருந்து பணத்தை பறித்து சென்றதும் தெரியவந்தது.  விசாரணைக்கு பிறகு இருவரையும் போலீசார் கொட்டாரக்கரை நீதிமன்றத்தில்  ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். பின்னர் இருவரையும் போலீசார்  காவலில் எடுத்து கிடுக்கிப்பிடியாக விசாரித்தனர். விசாரணையின்போது  இவர்களுடன் ஈரான் நாட்டைச் சேர்ந்த பெஹ்னாஸ் (32), மரியம் மெகபூபி (36),  மோர்டெசா (47), காலித் மெகபூபி (54) மற்றும் 13 வயதான சிறுமி ஆகிய 5 பேர்  வந்தது என்பது தெரியவந்தது. அவர்கள் கொல்லத்தில் உள்ள ஒரு ஓட்டலில் தங்கி  இருந்துள்ளனர். இதற்கிடையே ஆமீர், நஸ்ரின் ஆகியோர் போலீசில்  சிக்கிய தகவல் ஓட்டலில் இருந்தவர்களுக்கு தெரியவந்தது. இதையடுத்து அவர்கள்  அவசரம் அவரசமாக ஓட்டல் அறைகளை காலி செய்துவிட்டு மாயமாகி விட்டனர்.  இதுகுறித்து தகவல் அறிந்ததும் கொல்லம் போலீசார் அந்த ஓட்டலுக்கு விரைந்து  சென்றனர். பின்னர் ஓட்டலில் இருந்தவர்களிடம் தீவிரமாக விசாரணை நடத்தினர். இது  தவிர ஓட்டலில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளையும்  போலீசார் ஆய்வு செய்தனர். இருப்பினும் அவர்கள் எங்கு சென்றார்கள்? என்ன  ஆனார்கள்? என்பது உடனே தெரியவில்லை. இதற்கிடையே ஓட்டலில் இருந்து  தப்பியவர்கள் வெளிநாடு தப்பிச் செல்லாமல் இருக்கும் வகையில் போலீசார் அனைத்து முக்கிய விமான  நிலையங்களுக்கும் நோட்டீஸ் கொடுத்து உள்ளனர். இது  ஒருபுறம் இருக்க போலீசாரின் தொடர் விசாரணையில் இவர்கள் ஈரான் நாட்டை சேர்ந்த தீவிரவாதிகளாக இருக்கலாம். அவர்களுக்கு பாகிஸ்தான்  தீவிரவாதிகளுடன் தொடர்பும் இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.  இதையடுத்து மத்திய, மாநில உளவுத்துறை அதிகாரிகள் அவர்களை தீவிரமாக தேடி  வருகின்றனர்.

மூலக்கதை