காஷ்மீரில் குழந்தைகள் கல்வி; ஐ.நா.,விடம் மலாலா கவலை

தினமலர்  தினமலர்
காஷ்மீரில் குழந்தைகள் கல்வி; ஐ.நா.,விடம் மலாலா கவலை

லண்டன் : ''காஷ்மீரில், குழந்தைகள் பள்ளிக்குச் செல்ல, ஐ.நா., சபை உதவ வேண்டும்,'' என, நோபல் பரிசு வென்றவரும், பாகிஸ்தானைச் சேர்ந்த கல்வி உரிமை ஆர்வலருமான, மலாலா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஜம்மு - காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை திரும்பப் பெறும் வகையில், 370வது பிரிவு ரத்து செய்யப்பட்டது. இதனால், ஆக., 5- முதல், 40 நாட்களுக்கு மேலாக, ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. பள்ளிகள் திறக்கப்பட்ட போதிலும், எதிர்பார்த்த அளவுக்கு குழந்தைகள் வரவில்லை என, செய்திகள் வெளியாகின.

இந்நிலையில், பாகிஸ்தானைத் சேர்ந்தவரும், குழந்தைகளின் கல்வி உரிமைக்காக போராடி வருபவருமான, மலாலா யூசுப்சாய், தன், 'டுவிட்டர்' சமூக வலைதள பக்கத்தில் கூறி இருப்பதாவது: காஷ்மீரில் அமைதியை நிலைநாட்ட, ஐக்கிய நாடுகள் சபை தலைவர்கள் முயற்சி எடுக்க வேண்டும். காஷ்மீர் மக்களின் குரல்களை செவி கொடுத்து கேட்க வேண்டும்; அங்குள்ள குழந்தைகள், பாதுகாப்பாக பள்ளி செல்வதற்கு உதவ வேண்டும்.

காஷ்மீர் குழந்தைகள் பள்ளி செல்லாமல் இருப்பதும், பெண் குழந்தைகள் அச்சப்பட்டு வீட்டை விட்டு வெளியேறவில்லை என்பதும், ஆழ்ந்த கவலையளிக்கிறது.காஷ்மீரில் உள்ள பெண் குழந்தைகளின் குரல்களை, நேரடியாக கேட்க விரும்புகிறேன். அங்கு, தகவல் தொடர்பு முடங்கி இருப்பதால், காஷ்மீர் மக்களின் கதைகளை அறிய அதிகமான சிரத்தை எடுக்கிறேன். இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

மூலக்கதை