60 வயதில் அடியெடுத்து வைக்கிறது தூர்தர்ஷன்

தினமலர்  தினமலர்
60 வயதில் அடியெடுத்து வைக்கிறது தூர்தர்ஷன்

புதுடில்லி: 1980-90 காலகட்டத்தில் இளவயதினரை கவர்ந்திழுத்த தூர்தர்ஷன் தன்னுடைய 60-வயதில் அடியெடுத்து வைக்கிறது.


கடந்த 1959 ம் ஆண்டு செப்.,15-ல் தலைநகர் டில்லியில் பரிசோதனையாக துவங்கப்பட்டது. பின்னர் 1965-ல் சேவையாக மாற துவங்கியது.1972 ல் மும்பை மற்றும் அமிர்தசரஸ் நகரங்களில் ஒளிபரப்பபட்டது. 1975 முதல் பல்வேறு நகரங்களுக்கு தனது சேவையை விரிவுபடுத்தியது.



தொடர்ந்து1976 ம் ஆண்டு ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தில் தனித்துறையாக மாறியது. தற்போது கல்வி ,விவசாயம் மற்றும் லோக்சபா, ராஜ்யசபா உள்ளிட்ட 34 செயற்கை கோள் சேனல்களுடன் பல தரப்பட்ட சேனல்களை டி.டி.எச்சில் இலவசமாக வழங்கி வருகின்றன.

இது குறித்து பிரசார் பாரதியின் தலைமை செயல் அதகாரி சாக்ஷி சேகர் கூறுகையில் தூர்தர்ஷன் கடந்த 60 ஆண்டுகளில் பல கட்டங்களை தாண்டி வந்துள்ளது. அதற்கு வயதாகிவிட வில்லை. இது இன்றைய டிஜிட்டல் தலைமுறையினருக்கு ஒரு புதிய அனுபவம். அனைத்து தொலைக்காட்சி நிறுவனங்களுக்கும் இது ஒரு மைல்கல் ஆகும். என்றார்.

தூர்தர்ஷன் இயக்குனர் ஜெனரல் சுப்ரியாசாஹூ கூறுகையில் தூர்தர்ஷன் உலகின் முன்னணி ஒளிபரப்பாளர்களில் ஒன்றாக உருவெடுத்துள்ளது என்பதில் பெருமிதம் கொள்ளலாம். தொடர்ந்து புதிய தலைமுறையினரையும் கவர்ந்திழுக்கட்டும் என்றார்.

தொடர்ந்து 80-களில் தூர்தர்ஷைனை மட்டும் பார்த்து வந்தவர்கள் தற்போது மலரும் நினைவுகள் குறித்த டுவிட்டரில் பதிவிட்டு வருகின்றனர். அதில் உங்களுக்கு பிடித்த நிகழ்ச்சிகள் எது என்றும் , துவக்கத்தில் இருந்த டி.வி லோகோவையும் டுவிட்டரில் பதிவிட்டு வருகின்றனர்.

சித்ராஹார், மகாபாரத், தேக் பாய் தேக், மால்குடி டேஸ் போன்ற பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் 80 களின் பிற்பகுதியிலும் 90 களின் முற்பகுதியிலும் இந்தியர்களின் கற்பனை மற்றும் மக்களை ஒன்றிணைத்த தூய பொழுதுபோக்குகளாக மக்களின் மனதில் பதிந்திருந்தது. 1983 ல் கிரிக்கெட்டில் இந்திய அணி உலக கோப்பையை வென்றதை லட்க்கணக்கானோர் தூர்தர்ஷனில் பார்த்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை