'காவிரி கூக்குரல்' பேரணி: முதல்வர் வரவேற்பு

தினமலர்  தினமலர்
காவிரி கூக்குரல் பேரணி: முதல்வர் வரவேற்பு

சென்னை : காவிரி பாயும் மாவட்ட விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த, ஈஷா அறக்கட்டளை நிறுவனர், ஜத்குரு துவக்கியுள்ள, இரு சக்கர வாகனப் பேரணி, நேற்று, சென்னையை வந்தடைந்தது. சத்குருவை, கவர்னர், பன்வாரிலால் புரோஹித், முதல்வர், பழனிசாமி உள்ளிட்டோர் வரவேற்றனர்.

காவிரி பாயும் மாவட்ட விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில், 'காவிரி கூக்குரல்' என்ற இயக்கத்தை, ஈஷா அறக்கட்டளை நிறுவனர், சத்குரு தொடங்கி உள்ளார். அவர், கர்நாடகாவின் தலைக்காவிரியில் இருந்து, திருவாரூர் வரை, 'டூவீலர்' பேரணியை மேற்கொண்டுள்ளார். அந்த பேரணி, நேற்று, சென்னையை வந்தடைந்தது. சத்குருவுக்கு, சென்னை பல்கலையில், வரவேற்பு அளிக்கப்பட்டது.

நிகழ்ச்சியில், முதல்வர், பழனிசாமி பேசியதாவது: மரங்கள், தமக்கு தேவையான தண்ணீரை விட, அதிகமான நீரை உறிஞ்சி, வெளியிடும். அது தான், ஈரப்பதமாக, மேகமாக, மழையாக நமக்கு உதவுகிறது. அதனால் தான், நாம், வேப்ப மரங்களை, மாரியம்மன் என்றும், அரச மரங்களை, விநாயகர் என்றும் வணங்குகிறோம். இன்றும், பழங்குடியினரின் திருமணம் உள்ளிட்ட சடங்குகளில், மரங்களை வணங்கும் வழக்கம் உள்ளது. தமிழக அரசு, இந்தாண்டு, 71 லட்சம் மரக்கன்றுகளை நட உள்ளது. தமிழக அரசு, பல்வேறு திட்டங்களின் வழியாக, மரங்களை வளர்த்து வருகிறது.

மரம் வளர்ப்பு பணிகளில், வனத்துறை, தோட்டக்கலைத் துறைகள் ஈடுபட்டுள்ளன. சுற்றுச்சூழலும் விவசாயமும் செழிக்கும் வகையில், இந்த திட்டங்கள் செயல்படுத்தப் படுகின்றன. காவிரியின் பல்லுயிர் பெருக்கத்தை வளர்க்க, 'நடந்தாய் வாழி காவேரி' என்ற திட்டம் பற்றி, பிரதமரிடம் கூறினேன். அனைத்து, தமிழக நதிகளிலும் மாசு நீக்கி, குடிநீர் திட்டங்களையும் செயல்படுத்த உள்ளது. இவ்வாறு, அவர் பேசினார்.

தமிழக துணை முதல்வர், ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது: பழந்தமிழர்கள், உடன்பிறப்பை போல, மரங்களை வளர்த்தனர். பின் ஏற்பட்ட காலமாற்றம், மக்கள் தொகை பெருக்கம் உள்ளிட்ட காரணங்களால், மரங்கள் வெட்டப்பட்டன. இதனால், மழை வரத்தும் தடைபட்டு, ஆறுகள் வறண்டு, விவசாயிகள் கஷ்டப்பட்டு வருகின்றனர். இந்த நிலையை மாற்ற, சத்குரு, காவிரி கூக்குரல் என்ற இயக்கத்தை துவக்கி உள்ளார். அவரது விழிப்புணர்வு பயணத்தில், விவசாயிகள், பொதுமக்கள் என, அனைவரையும் மரம் வளர்க்கும் பணியில் ஈடுபடுத்த உள்ளார். அவருடன் இணைந்து, 242 கோடி மரங்களை நட்டால், இந்த இயக்கம் வெற்றி பெறும்.

வரவேற்பை ஏற்று, சத்குரு பேசியதாவது:நம் நாட்டில், 120 நதிகள் ஓடுகின்றன. அவற்றில் ஒன்றான காவிரி, நமக்கு தாய் போல உள்ளது. நம் ரத்தநாளங்களில், காவிரி நீர் நிறைந்திருக்கிறது. காவிரி, தமிழ் கலாச்சாரத்தில் பின்னிப் பிணைந்திருக்கிறது. இந்த நதி வளர்த்த மரங்களின் பரப்பில், பாதிகூட தற்போது இல்லை. மீண்டும், பழைய சூழலை உருவாக்க முயற்சித்து வருகிறோம்.

மரங்கள் வளர்க்கும் விவசாயிகளுக்கு, மானியம் வழங்கவும், திட்டத்திற்கான உதவிகள் செய்யவும், கர்நாடக, புதுச்சேரி முதல்வர்கள் முன்வந்துள்ளனர். நிலத்தில் பெரும்பகுதி, விவசாயிகளிடம் தான் உள்ளது. அதனால், அவர்கள் வேளாண் காடுகளை வளர்க்க, நாம் ஊக்கப்படுத்த வேண்டும். அப்போது தான், காவிரி பாயும் நிலத்தில், 12 ஆண்டுகளில், 242 கோடி மரங்களை வளர்க்க முடியும். அவ்வாறு வளர்த்தால், விவசாயிகள், அதிகளவில், ஜி.எஸ்.டி., வரி செலுத்தும் நிலைக்கு உயர்வர்.

அதை நோக்கித் தான், ஈஷா மையம் பயணிக்கிறது.இவ்வாறு, அவர் பேசினார். நிகழ்ச்சியில், தமிழக கவர்னர், பன்வாரிலால் புரோஹித், த.மா.கா., தலைவர், வாசன், நடிகை, சுகாஷினி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

மூலக்கதை