தமிழகம் தனி மாதிரி என்று நிரூபித்துள்ளோம்: ஸ்டாலின்

தினமலர்  தினமலர்
தமிழகம் தனி மாதிரி என்று நிரூபித்துள்ளோம்: ஸ்டாலின்

சென்னை : ''இந்தியாவே ஒரு மாதிரி இருந்தாலும், தமிழகம் தனி மாதிரி என, நிரூபித்துள்ளோம். தயாராகும் போர்க்களத்திற்கு புறப்பட நாம் தயாராக வேண்டும்,'' என, தி.மு.க., தலைவர், ஸ்டாலின் பேசினார். ''வைகோ தன் உடல் நலத்தை பாதுகாக்க வேண்டும்; இது, வேண்டுகோள் அல்ல; என் கண்டிப்பு,'' என்றும், அவர் பேசினார்.

ம.தி.மு.க., சார்பில், மறைந்த முன்னாள் முதல்வர், அண்ணாதுரையின், 111வது பிறந்தநாள் விழா மாநாடு, சென்னையில், நேற்று நடந்தது. மாநாட்டை துவக்கி, ஸ்டாலின் பேசியதாவது: நாம் வேறு, வேறு கட்சிகளாக பிரிந்திருந்தாலும், கொள்கையில் ஒன்றாக நிற்கிறோம். ம.தி.மு.க., மேடையில் நான் நிற்கிறேன்; தி.மு.க., மேடையில் வைகோ நிற்கிறார். இது, ஒரு சிலருக்கு கோபமாக, பொறாமையாக இருக்கலாம்; ஆத்திரத்தை ஏற்படுத்தலாம். நாங்கள் மேடையில் மட்டுமல்ல, களத்திலும் ஒன்றாக இருக்கிறோம். இந்தியாவே ஒரு மாதிரி இருந்தாலும், 'தமிழகம் தனி மாதிரி' என, நாம் நிரூபித்துள்ளோம்.

தமிழகத்திற்கு மட்டுமல்ல, ஒட்டு மொத்த நாட்டிற்கும், லோக்சபாவில், நாம் குரல் கொடுத்து வருகிறோம். பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்திருக்கிறது. புதிய நிறுவனங்கள் உருவாகவில்லை. புதிய வேலை வாய்ப்புகள் கிடையாது. ஜனநாயக அமைப்புகள், இன்றைக்கு, கேலிக் கூத்தாக்கப்படுகின்றன. தமிழகம் திட்டமிட்டு பழி வாங்கப்படுகிறது. ரயில்வே, தபால் துறைகளில், தமிழ் மொழி திட்டமிட்டு புறக்கணிக்கப்படுகிறது. நாம் லேசாக கண் அயர்ந்தால், ஹிந்தியை திணித்து விடுவர்; கொஞ்சம் அசந்து விட்டால், தமிழையே புறக்கணித்து விடுவர்.

மொழியை திணிப்பது, 'நீட்' தேர்வின் வாயிலாக மருத்துவக் கல்வியை சிதைப்பது, காவிரியில் துரோகம் போன்றவற்றை மத்திய அரசு செய்துள்ளது. இதற்காக, பல போராட்டங்கள் நடத்திக் கொண்டிருக்கிறாம். தொடர் போராட்டங்களை, தி.மு.க.,வும், ம.தி.மு.க.,வும் கைகோர்த்து நடத்தியாக வேண்டும். வைகோ, போராட்டத்தை முன்னெடுக்க கூடியவர். அவருக்கு, யாரும் கற்றுத்தர வேண்டிய அவசியம் இல்லை. அவர், கொஞ்சம் உடல் நலத்தை பேணி பாதுகாக்க வேண்டும்.

இது என் வேண்டுகோள் மட்டுமல்ல; கண்டிப்புடன் சொல்கிறேன். அந்த உரிமை எனக்கு இருக்கிறது. உடல் நலத்தில் அக்கறை செலுத்த சொல்வது உங்களுக்காக அல்ல; உங்கள் குடும்பத்திற்காக அல்ல; தமிழ் இனம், மொழி, நாட்டின் நலத்தை பேணி பாதுகாக்க வேண்டும் என்பதற்காகத்தான். அவருடைய ஆரோக்கியத்தல்தான், தமிழ் பேரினத்தின் ஆரோக்கியம் அடங்கியுள்ளது. போர்க்களம் தயாராகிக் கொண்டிருக்கிறது. அனைவரும் புறப்பட தயாராக வேண்டும். இவ்வாறு, அவர் பேசினார்.

மாநாட்டிற்கு, துணைப் பொதுச்செயலர், சத்யா தலைமை வகித்தார். ஸ்டாலினுக்கு, ம.தி.மு.க., பொதுச்செயலர், வைகோ, நினைவு பரிசு வழங்கினார். 'தமிழகத்தின் உரிமைகள் பாதுகாக்க வேண்டும்; பாகிஸ்தான் -இந்தியா போர் நிறுத்தப்பட வேண்டும்; புதிய கல்விக் கொள்கையையும், ரயில்வே, தபால் துறைகளை தனியார்மயமாக்கும் நடவடிக்கைகளை மத்திய அரசு கைவிட வேண்டும்; நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த வேண்டும்' என்பது உட்பட, பல்வேறு தீர்மானங்கள், மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன.

மூலக்கதை