கட்சிகளின் கொடி கம்பங்களை அகற்ற முதல்வர் உத்தரவு

தினமலர்  தினமலர்
கட்சிகளின் கொடி கம்பங்களை அகற்ற முதல்வர் உத்தரவு

சென்னை : சென்னை உயர்நீதிமன்றத்தின் கிடுக்கிப்பிடியால் பேனர்கள் வைப்பதற்கு அரசியல் கட்சிகள் தடை விதித்துள்ள நிலையில் நெடுஞ்சாலைகளை ஆக்கிரமித்துள்ள பல்வேறு கட்சிகளின் கொடிக் கம்பங்களை அகற்ற முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

சென்னையில் கட்சி பேனர் சரிந்து விழுந்த விபத்தில் தனியார் நிறுவன மென்பொறியாளர் சுபஸ்ரீ பரிதாபமாக இறந்தார். இவரது மறைவை தொடர்ந்து 'இன்னும் எத்தனை உயிர் பலிகள் தேவை; பேனர் விவகாரத்தில் நடவடிக்கை எடுக்காமல் அரசு மெத்தனமாக இருப்பது ஏன்?' என உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது. அரசியல் கட்சிகளையும் அரசு சாடியது. இதையடுத்து கட்சி நிகழ்ச்சிகளுக்கு பேனர்களை வைக்கக் கூடாது என அ.தி.மு.க. - தி.மு.க. உட்பட பல்வேறு கட்சிகள் தொண்டர்களுக்கு தடை விதித்துள்ளன.

கொடி கம்பத்திற்கும் தடை


மாநிலம் முழுவதும் உள்ள நெடுஞ்சாலைகளை ஆக்கிரமித்து அவற்றின் ஓரங்களில் பல்வேறு அரசியல் கட்சியினர் கொடிக் கம்பங்களை அமைத்துள்ளனர். 'எங்கள் கட்சி தான் பெரிய கட்சி' என காட்டிக் கொள்ளும் வகையில் பல கொடி கம்பங்கள் 100 அடி உயரத்திற்கும் மேல் அமைக்கப்பட்டு உள்ளன. இதனால் அவ்வப்போது விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன.

உயர்நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து நெடுஞ்சாலைகளில் உள்ள கட்சி கொடி கம்பங்களை கட்சிப் பாகுபாடு பார்க்காமல் உடனடியாக அகற்ற வேண்டும் என முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து நெடுஞ்சாலைத் துறை இயக்குனர் வாயிலாக தலைமை பொறியாளர்கள் மற்றும் கோட்ட பொறியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் உள்ள ஜி.என்.டி. சாலை ஜி.எஸ்.டி. சாலை திருவள்ளூர், பூந்தமல்லி நெடுஞ்சாலை, நுாறடிச்சாலை உள்ளிட்ட பல சாலைகளில் நேற்று முன் தினம் இரவு இந்த பணிகளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டு இருந்தது. இதற்கான ஏற்பாடுகள் தயார் நிலையில் இருந்தன. ஆனால் அண்ணாதுரை பிறந்தநாள் விழாவை காரணம் காட்டி கட்சிக் கொடி கம்பங்களை அகற்ற சென்னை மாநகர போலீசார் அனுமதிக்கவில்லை. போலீசாரின் அனுமதி கிடைத்தவுடன் கொடிக் கம்பங்களை அகற்றும் பணியில் ஈடுபட நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் முடிவெடுத்துள்ளனர்.

அடுத்தடுத்து தமிழகம் முழுவதும் கொடிக் கம்பங்களை அகற்றும் அதிரடி நடவடிக்கை தொடரும் என நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.

மூலக்கதை