மாநில ஹாக்கி பைனலில் இன்று வருமானவரித்துறை அணியுடன் கோவில்பட்டி எஸ்டிஏடி மோதல்

தினகரன்  தினகரன்
மாநில ஹாக்கி பைனலில் இன்று வருமானவரித்துறை அணியுடன் கோவில்பட்டி எஸ்டிஏடி மோதல்

சென்னை: மாநில ஹாக்கி போட்டித் தொடரின் இறுதிப் போட்டியில் வருமானவரித்துறை - கோவில்பட்டி எஸ்டிஏடி அணிகள் இன்று மோதுகின்றன.வருமானவரித்துறை மனமகிழ் மன்றத்தின் முதலாவது மாநில அளவிலான ஹாக்கி போட்டித் தொடர் சென்னையில் நடைபெற்று வருகிறது. நேற்று பரபரப்பான அரை இறுதிப் போட்டிகள் நடைபெற்றன. முதல் அரை இறுதியில் கோவில்பட்டி எஸ்டிஏடி - ஐசிஎப் அணிகள் மோதின. இதில் கோவில்பட்டி எஸ்டிஏடி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. அந்த அணியின் செல்வராஜ், தினேஷ்குமார் ஆகியோர் தலா ஒரு கோல் அடித்தனர். ஐசிஎப் அணியின் பிரித்வி ஒரு கோல் அடித்தார். தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது அரை இறுதிப் போட்டியில் வருமான வரித்துறை - தமிழ்நாடு ஹாக்கி யூனிட்  அணிகள் மோதின. இதில் வருமானவரித்துறை அணி 3-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. அந்த அணி சார்பில் சார்லஸ், பிச்சுமணி, சரவணகுமார் தலா ஒரு கோல் அடித்தனர். தமிழ்நாடு ஹாக்கி யூனிட் அணியின் வினோதன், வினோத் ராயர் தலா ஒரு கோல் போட்டனர். இன்று நடைபெறும் இறுதிப் போட்டியில் கோவில்பட்டி எஸ்டிடி அணியும் வருமான வரித்துறை  அணியும்  மோதுகின்றன.

மூலக்கதை