2-2! சமனில் முடிந்த ஆஷஸ் தொடர்

தினமலர்  தினமலர்
22! சமனில் முடிந்த ஆஷஸ் தொடர்

ஓவல்: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஐந்தாவது ஆஷஸ் டெஸ்டில் இங்கிலாந்து அணி 135 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம், தொடர் 2-2 என சமன் ஆனது.


இங்கிலாந்து சென்ற ஆஸ்திரேலிய அணி ஐந்து போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் பங்கேற்றது. முதல் நான்கு போட்டிகள் முடிவில், ஆஸ்திரேலியா 2-1 என முன்னிலையில் இருந்தது. ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் லண்டன் ஓவலில் நடந்தது. முதல் இன்னிங்சில் இங்கிலாந்து 294, ஆஸ்திரேலியா 225 ரன்கள் எடுத்தன. மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில், இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்சில் 8 விக்கெட்டுக்கு 313 ரன்கள் எடுத்திருந்தது.

நேற்று நான்காவது நாள் ஆட்டம் நடந்தது. கம்மின்ஸ் 'வேகத்தில்' ஆர்ச்சர் (3) ஆட்டமிழந்தார். லீச் 9 ரன்களில் திரும்பினார். இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்சில் 329 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஆஸ்திரேலியா சார்பில் அதிகபட்சமாக லியான் 4 விக்கெட் வீழ்த்தினார்.


வார்னர் ஏமாற்றம்:


399 ரன்கள் இலக்குடன் ஆஸ்திரேலிய அணி 2வது இன்னிங்சை துவக்கியது. மார்கஸ் ஹாரிஸ், வார்னர் ஜோடி மீண்டும் ஏமாற்றியது. பிராட் பந்தில் ஹாரிஸ் (9) போல்டானார். மீண்டும் வந்த பிராட் இம்முறை வார்னரை (11) வெளியேற்றினார். லபுசேன், ஸ்டீவ் ஸ்மித் ஜோடி மீது சுமை அதிகரித்தது. 3வது விக்கெட்டுக்கு 27 ரன்கள் எடுத்தபோது, லீச் 'சுழலில்' லபுசேன் (14) சிக்கினார்.

வேட் சதம்:


பிராட் பந்தில் ஸ்டீவ் ஸ்மித் 23 ரன்களில் திரும்பினார். லீச் பந்துவீச்சில் வேட் 'ஹாட்ரிக்' பவுண்டரி அடித்தார். மிட்சல் மார்ஷ் (24), கேப்டன் பெய்ன் (21) விரைவில் அவுட்டாகினர். பொறுப்புடன் விளையாடிய வேட் சதம் கடந்தார். பிராட் பந்தில் கம்மின்ஸ் (9) ஆட்டமிழந்தார். ரூட் 'சுழலில்' மாத்யூ வேட் (117) சிக்க, தோல்வி உறுதியானது.


மற்றவர்கள் ஏமாற்ற, ஆஸ்திரேலிய அணி இரண்டாவது இன்னிங்சில் 263 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி தோல்வியடைந்தது. இங்கிலாந்து சார்பில் அதிகபட்சமாக பிராட், லீச் தலா 4 விக்கெட் கைப்பற்றினர். இதனையடுத்து, ஐந்து போட்டிகள் கொண்ட தொடர் 2-2 என சமன் ஆனது. ஆட்டநாயகன் விருது ஜோப்ரா ஆர்ச்சருக்கு வழங்கப்பட்டது. தொடர் நாயகர்களாக ஸ்டீவ் ஸ்மித் மற்றும் பென் ஸ்டோக்ஸ் தேர்வு செய்யப்பட்டனர்.

மூலக்கதை