வீடுகளுக்கான தற்போதைய அறிவிப்பு போதவில்லை, நிர்மலா மேடம்!

தினமலர்  தினமலர்
வீடுகளுக்கான தற்போதைய அறிவிப்பு போதவில்லை, நிர்மலா மேடம்!

ஏற்­று­மதி மற்­றும் கட்­டு­மா­னத் துறை­க­ளுக்கு, புதிய சலு­கை­களை வழங்­கி­யுள்­ளார், நிதி அமைச்­சர் நிர்­மலா சீதா­ரா­மன். ஒவ்­வொரு துறை­யி­ன­ரும், அவ­ருக்கு வைக்­கும் கோரிக்­கை­களை அடுத்து, புதிய சலு­கை­களை அவர் அளித்து வரு­வ­தா­கத் தெரி­கிறது.



கட்டுமானத் துறையினருக்கு, இரண்டு முக்கிய அறிவிப்புகள் வழங்கப்பட்டுள்ளன. ஒன்று, 60 சதவீதம் வரை கட்டிய பில்டர்களுக்கு, அக்கட்டுமானங்களை பூர்த்தி செய்வதற்குத் தேவைப்படும் தொகையை வழங்குவதற்கு, 20 ஆயிரம் கோடி ரூபாய் நிதியம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.



இதில், அவர்கள் வாராக்கடன் அல்லது திவால் சட்டத்தின் படி நடவடிக்கை எடுக்கப்படாத நிறுவனங்களாக இருக்க வேண்டும் என்பது தான் முன்நிபந்தனை.பல நிறுவனங்கள், கடந்த சில ஆண்டுகளில், தங்கள் கட்டுமானங்களை நிறைவேற்றித் தர முடியாமல் திண்டாடுவது உண்மை.


அவர்களில் பலர், வங்கிகளில் வாங்கிய கடன்களைத் திருப்பிச் செலுத்த முடியாமல் போவது உறுதி. அந்த நிறுவனங்கள் திவாலாகவே ஆகிவிட்டது என்றால், அவற்றுக்குக் கூடுதல் கடன் கொடுக்க முடியாது, கூடாது என்பது நியாயம் தான். ஆனால், வாராக்கடன் பிரச்னை, அப்படிப்பட்டது அல்ல.மூன்று மாதங்கள், கடன் தொகையைக் கட்டவில்லை என்றாலே, அந்த நிறுவனங்கள் வாராக்கடன் பட்டியலில் இடம் பிடித்து விடும்.


வரையறை



இன்று, இத்தகைய சிறு, குறு கட்டுமான நிறுவனங்கள், அதுவும் சகாய விலையில் வீடு கட்டிக் கொடுக்கும் நிறுவனங்களுக்கு உதவி செய்யவே, இத்தகைய கடன் வசதி ஏற்படுத்தித் தரப்படுகிறது. அப்படி இருக்கும்போது, வாராக்கடன் நிறுவனங்கள் என அவை வகைப் படுத்த பட்டால், நிச்சயம் கடன் பெறாமல் போய்விடக் கூடிய அபாயம் உண்டு.


நிதி அமைச்சகம் இந்த விஷயத்தில் என்ன இறுதி முடிவு எடுக்கப் போகிறது என்பதை பார்க்க வேண்டும். இன்னொரு வழிமுறை, வெளிநாட்டிலிருந்து கடன் பெற்றுக் கொள்ளலாம் என்ற வாசலும் திறந்து விடப்பட்டுள்ளது.பல சிறு, குறு கட்டுமான நிறுவனங்களுக்கு இத்தகைய வசதி இல்லாமல் இருந்தது. அதற்கான வாய்ப்பு இப்போது கொடுக்கப்பட்டுள்ளது.



இதிலும் ஒரு சின்ன நெருடல் இருக்கிறது. அதாவது, இச்சலுகைகள் எல்லாம் சகாய விலை வீடு கட்டு வோருக்கு மட்டுமே. 45 லட்சம் ரூபாய் வரை உள்ளவையே சகாய விலை வீடுகள் என்று வரையறை செய்யப்பட்டு உள்ளன.தற்சமயம் இறுதி நிலையில் நின்று போயிருக்கும் எல்லா வீடுகளுமே, 45 லட்சம் ரூபாய்க்குட்பட்ட வீடுகள் அல்ல. அதற்கு மேலும் விலையுள்ள வீடுகள். நாடெங்கும், 8.5 லட்சம் கட்டுமானங்கள் நின்று போயிருப்பதாக தகவல்.


அப்படியிருக்கும் பட்சத்தில், சகாய விலை வீடு கட்டுவோருக்கே, இத்தகைய சலுகை எனும் போது, அதனால் கிடைக்கக்கூடிய பயன் அளவும், குறைவாகவே இருக்கும்.சகாய விலை வீடுகள் என்பதை, 80 லட்சம் ரூபாய் வரை உயர்த்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது என்கின்றனர், இத்துறை நிபுணர்கள்.



இன்னொரு அம்சமும், நிதி அமைச்சர் வழங்கிய சலுகைகள் குறிப்பில் காணப்படுகிறது. அதாவது, அரசு ஊழியர்களுக்கு மட்டும் ஒரு சலுகை வழங்கப்பட்டுள்ளது.அவர்கள் வீடு வாங்கும் போது, அந்த அட்வான்ஸ் தொகைக்கான வட்டி விகிதம், 10 ஆண்டு அரசுக் கடன் பத்திரங்களுக்கான வட்டி விகிதத்துக்கு ஒப்பாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.தற்போது, 10 ஆண்டு அரசு கடன் பத்திரங்களுக்கான வட்டி விகிதம், 6.6 சதவீதமாக உள்ளது. இது உண்மையிலேயே மிக நல்ல வட்டி விகிதம்.


தெளிவு வேண்டும்


இந்தச் சலுகையை அரசு ஊழியர்களுக்கு மட்டுமல்லாது, நிரந்தர வேலையில் உள்ள அனைத்து தனியார் துறை ஊழியர்களுக்கும் விரிவுபடுத்த வேண்டும்.இன்னொரு அம்சம், நம் கவனத்தைக் கவருவது, வருமான வரி செலுத்தும்போது, அதில் சகாய விலை வீடு வாங்குபவர்களுக்கு சலுகை வழங்கப்பட்டுள்ளது.


அதாவது, 2020 மார்ச் 31க்குள் வாங்கப்படும் சகாய விலை வீடுகளுக்கு (45 லட்சம் ரூபாய்க்குள் உள்ள வீடு), கட்டப்படும் வட்டித் தொகையில், 1.5 லட்சம் வரை கூடுதல் கழிவு பெறலாம். இதை இரண்டு விதத்தில் அர்த்தப்படுத்திக் கொள்ளலாம்.‘கூடுதல் கழிவு’ என்றால், ஏறகனவே முதல் வீடு வைத்து கடன் கட்டுபவர்கள், இரண்டாம் வீட்டை சகாய விலை வீடாக வாங்கினால், அதன் மூலம், கூடுதலாக, 1.5 லட்சம் ரூபாய் வரை கழிவு பெறலாம் என்பது ஒன்று.



சகாய விலை வீடு வாங்குபவர்கள் வருமான வரி தாக்கல் செய்யும்போது, அவர்களுக்கு ஏற்கனவே உள்ள, 1.5 லட்சம் ரூபாய் சலுகையோடு, இன்னொரு, 1.5 லட்சம் ரூபாய் சலுகையாகவும் அர்த்தப்படுத்திக் கொள்ளலாம். வரும் நாட்களில் இந்த விஷயத்தில் தெளிவு கிடைக்கும்.ஆனால், மீண்டும் இந்தச் சலுகை சகாய விலை வீடு வாங்குபவர்களுக்கு மட்டுமே என்பது கொஞ்சம் இடறுகிறது.


இன்றைய நிலையில் கட்டப்பட்டு, வாங்குவார் இல்லாமல் கிடக்கும் வீடுகள் வாங்கப்பட வேண்டும். அதன் மூலம் கட்டுமானத் துறை, தங்களது சிரமங்களில் இருந்து வெளியே வந்து, மீண்டும் புதிய திட்டங்களை அறிவிக்க வேண்டும் என்பது தான் யோசனை.அப்படியென்றால், இந்த வருமான வரிச் சலுகையை, எல்லா பிரிவு இரண்டாம் வீடுகளுக்கும் வழங்குவது ஒன்றே, சந்தை விரிவடைய வாய்ப்பை ஏற்படுத்தித் தரும்.



கட்டுமானத் துறை பக்கம் யோசித்த நிதி அமைச்சர், கொஞ்சம் அதை வாங்குவோர் தரப்பிலும் யோசிக்க வேண்டும். தற்சமயம், சகாய விலை வீடுகள், அரசு ஊழியர்கள் பக்கம் மட்டுமே அவரது கடைக்கண் பார்வை பட்டுள்ளது.இன்னும், வெளியே இருக்கும் அரசு ஊழியர்கள் அல்லாத ஏராளமான ஜீவன்கள் காத்திருக்கின்றன. இவர்கள் தான் இந்தியாவின் மத்திய தர வர்க்கம் என்பது. இவர்களுடைய எதிர்பார்ப்பெல்லாம் இது தான்:



ஏற்கெனவே தெரிவித்தது போன்று வங்கி வட்டி விகிதங்கள் குறைய வேண்டும் என்பதோடு, கூடுதல் கடன் தொகை கொடுக்கவும் வேண்டும். தற்சமயம், சம்பள தாரர்களுக்கு மொத்த சம்பளத்தைப் போன்று, 36 மடங்கும், நிகர சம்பளத்தைப் போன்று, 30 மடங்கும் கடன் தொகை வழங்கப்படுகிறது. இந்தத் தொகைகளை அதிகப்படுத்த வேண்டும்.



இரண்டாவதாக, வீடுகளின் விலை கணிசமாக குறைய வேண்டும். அதற்குத் தேவைப்படும் முத்திரைத்தாள் கட்டணம், பதிவுத் துறை கட்டணம் ஆகியவை குறைக்கப்பட வேண்டும். இவை நடந்தால் தான், வீடு வாங்குவது என்பது மீண்டும் மகிழ்ச்சியான அனுபவமாக மாறும். இதற்கான அறிவிப்புகளை அடுத்த கூட்டத்தில், நிதி அமைச்சர் வழங்குவார் என்று எதிர்பார்க்கலாமா?


ஆர்.வெங்கடேஷ்


பத்திரிகையாளர்

மூலக்கதை