மோடி நிகழ்ச்சியில் டிரம்ப் பங்கேற்பது உறுதி

தினமலர்  தினமலர்
மோடி நிகழ்ச்சியில் டிரம்ப் பங்கேற்பது உறுதி

வாஷிங்டன் : அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் நடக்கும் "Howdy Modi" நிகழ்ச்சியில் அமெரிக்க அதிபர் டிரம்ப் கலந்து கொள்ள உள்ளதை வெள்ளைமாளிகை உறுதி செய்துள்ளது.


இது தொடர்பாக வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில், செப்.,22 ம் தேதி அதிபர் டிரம்ப், டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஹூஸ்டன் நகருக்கு செல்ல உள்ளார். அங்கு இந்திய பிரதமர் மோடி கலந்து கொள்ளும் நிகழ்ச்சியில் அதிபர் டிரம்ப் பங்கேற்க உள்ளார். "Howdy Modi" நிகழ்ச்சி ஒளிமயமாக எதிர்காலத்தையும், கனவுகளையும் பகிர்ந்து கொள்ளும் நிகழ்வாக இருக்கும். இதில் ஒரு லட்சம் மக்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கிறோம். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மோடி, மீண்டும் இந்திய பிரதமராக பதவியேற்ற பிறகு முதல் முறையாக ஹூஸ்டன் நகருக்கு சென்று, அங்கு இந்திய-அமெரிக்க சமூகத்தினரிடையே உரையாற்ற உள்ளார். ஹூஸ்டன் என்ஆர்ஜி கால்பந்து மைதானத்தில் நடக்கும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள 50,000 க்கும் அதிகமானவர்கள் முன்பதிவு செய்துள்ளனர். "Howdy Modi" என பெயரிடப்பட்டுள்ள இந்த நிகழ்ச்சி டெக்சாஸ் இந்திய கூட்டமைப்பால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

செப்.,21 ம் தேதி அமெரிக்கா புறப்பட்டு செல்லும் மோடி, செப்.,23 முதல் 27 வரை நியூயார்க் நகரில் நடக்கும் ஐ.நா., மாநாட்டில் கலந்து கொள்ள உள்ளார். இந்த மாநாட்டின் போது அமெரிக்க அதிபர் டிரம்ப்பை சந்தித்து பேச மோடி திட்டமிட்டுள்ளார்.

மூலக்கதை