நாடு முழுவதும் நிலுவையில் கிடக்கும் பாலியல் வழக்கை விசாரிக்க 1,023 விரைவு நீதிமன்றங்கள்: அக்டோபர் 2 முதல் தொடக்கம்

தினகரன்  தினகரன்
நாடு முழுவதும் நிலுவையில் கிடக்கும் பாலியல் வழக்கை விசாரிக்க 1,023 விரைவு நீதிமன்றங்கள்: அக்டோபர் 2 முதல் தொடக்கம்

டெல்லி: நாடு முழுவதும் நிலுவையில் உள்ள 1.66 லட்சம் பாலியல் பலாத்கார வழக்குகளை விசாரிக்க 1,023 சிறப்பு விரைவு நீதிமன்றங்களை அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்த விரைவு நீதிமன்றங்கள் வரும் அக்டோபர் 2-ம் தேதி முதல் செயல்படத் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நாடு முழுவதும் பல்வேறு நீதி மன்றங்களில் 1,66,882 பாலியல் வழக்குகள் தேங்கி கிடக்கின்றன. இந்த வழக்குகளை விரைந்து விசாரிக்க மாவட்டம்தோறும் விரைவு நீதிமன்றங்களை அமைக்க வேண்டும். இரண்டு மாதங்களுக்குள் இந்த திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கடந்த ஜூலை இறுதியில் உத்தரவிட்டது.இதைத் தொடர்ந்து பாலியல் பலாத்கார வழக்குகளை விசாரிக்க ரூ.762.25 கோடி செலவில் நாடு முழுவதும் 1,023 விரைவு நீதிமன்றங் களை அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதில் 389 விரைவு நீதிமன்றங்கள், சிறார்கள் தொடர்பான பாலியல் வழக்குகளை (போக்சோ) மட்டும் விசாரிக்கும். இதர 634 நீதிமன்றங்கள் அனைத்து பாலியல் வழக்குகளையும் விசாரிக்கும்.ஒரு விரைவு நீதிமன்றம், 3 மாதங்களில் 42 வழக்குகளில் தீர்ப்பு வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி ஓராண்டில் ஒரு விரைவு நீதிமன்றம் குறைந்தபட்சம் 165 வழக்குகளை முடித்துவைக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. இதன்படி ஓராண்டுக்குள் 1.66 லட்சம் பாலியல் வழக்குகளுக்கும் தீர்வு காணப்படும். வரும் அக்டோபர் 2-ம் தேதி காந்தி ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் முதல் சிறப்பு விரைவு நீதிமன்றங்கள் செயல்படத் தொடங்கும் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.சிறப்பு விரைவு நீதிமன்றங்களை அமைப்பது தொடர்பாக மத்திய சட்ட அமைச்சகம் சார்பில் கடந்த ஆகஸ்ட் 8-ம் தேதி கேபினட் செயலாளருக்கு பரிந்துரை கடிதம் அனுப்பப்பட்டது. இந்த பரிந்துரை கடிதம் நிதியமைச்சகத்தின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. நிதியமைச்சகம் ஒப்புதல் அளித்தவுடன் விரைவு நீதிமன்றங்களை அமைக்கும் பணி தொடங்கப்படும் என்று தெரிகிறது.இதுகுறித்து மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சக வட்டாரங்கள் கூறியதாவது: முதல்கட்டமாக 9 மாநிலங்களில் 777 சிறப்பு விரைவு நீதிமன்றங்களும் இரண்டாம் கட்டமாக 246 சிறப்பு விரைவு நீதிமன்றங்களும் அமைக் கப்படும். தேசிய குற்ற ஆவண பதிவேட்டின்படி போக்சோ சட்டத்தில் 90,205 வழக்குகள் நிலுவையில் உள்ளன. ஒரு மாவட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட போக்சோ சட்ட வழக்குகள் நிலுவையில் இருந்தால் அந்த மாவட்டத்தில் சிறப்பு விரைவு நீதிமன்றம் அமைக்க உச்ச நீதிமன்றம் பரிந்துரை செய்துள்ளது.விரைவு நீதிமன்ற திட்டத்தை செயல்படுத்த மகாராஷ்டிரா, திரிபுரா, மேற்குவங்கம், மேகாலயா, ஜார்க் கண்ட், ஆந்திரா, பிஹார், மணிப்பூர், கோவா, மத்திய பிரதேசம், கர்நாடகா, மிசோரம், சத்தீஸ்கர், ராஜஸ்தான், உத்தராகண்ட், தமிழகம், அசாம், ஹரியாணா உள்ளிட்ட 18 மாநிலங்கள் முன்வந்துள்ளன. விரைவு நீதிமன்றங் கள் அமைக்கப்பட்ட பிறகு அந்த நீதிமன்றங்களின் செயல்பாடுகளை மத்திய உள்துறை அமைச்சகம் கண்காணிக்கும். விரைவு நீதிமன்றத்தின் வழக்குகளை விசாரிக்கும் விதம் குறித்து மத்திய சட்ட அமைச்சகம் அறிக்கை தாக்கல் செய்யும். அதற்கேற்ப விரைவு நீதிமன்றங்களில் தேவையான மாற்றங்கள் செய்யப்படும். இவ்வாறு அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.சிறுவர், சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் (போக்சோ) மத்திய அரசு அண்மையில் முக்கிய திருத்தங்களை செய்து நாடாளுமன்றத்தில் நிறை வேற்றியது. அதன்படி சிறுவர், சிறுமி களை பாலியல் வன்கொடுமை செய்வோருக்கு அதிகபட்சமாக மரண தண்டனை விதிக்கப்படும். குழந்தை களை வைத்து ஆபாச படம் எடுத்தால் அபராதத்துடன் 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கவும் இதே குற்றத் தில் 2-வது முறை ஈடுபட்டால் 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கவும் சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

மூலக்கதை