கொல்கத்தாவில் விமானப்படைக்கு மரியாதை பாலக்கோடு தாக்குதல் வடிவில் பூஜை பந்தல்: அபிநந்தன் சிலையும் இடம் பெறுகிறது

தினகரன்  தினகரன்
கொல்கத்தாவில் விமானப்படைக்கு மரியாதை பாலக்கோடு தாக்குதல் வடிவில் பூஜை பந்தல்: அபிநந்தன் சிலையும் இடம் பெறுகிறது

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் பாலக்கோடு விமானப்படை தாக்குதல் சம்பவத்தை பிரதிபலிக்கும் வகையில்  துர்கா பூஜை பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் கடந்த பிப்ரவரி 14ம் தேதி சிஆர்பிஎப் வீரர்கள் சென்ற வாகனத்தின் மீது வெடிகுண்டுகள் நிரப்பிய காரை மோத செய்து தீவிரவாதிகள் தற்கொலை படை தாக்குதல் நடத்தினர். இதில், 40 வீரர்கள் உயிரிழந்தனர். இந்த தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து பாகிஸ்தான் எல்லைக்குட்பட்ட பாலக்கோடு என்ற இடத்தில் தீவிரவாதிகளின் முகாம்கள் மீது இந்திய விமானப்படை விமானங்கள் குண்டு வீசி தாக்குதல் நடத்தின. இதில், ஏராளமான தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.  அவர்களின் முகாம்கள் அழிக்கப்பட்டன. மேற்கு வங்க மாநிலத்தில் துர்கா பூஜை ஏற்பாடுகள் தற்போது களை கட்ட தொடங்கியுள்ளது. பல்வேறு பகுதிகளில் துர்கா தேவியின் சிலைகளை அமைத்து வழிபாடு செய்வதற்காக பந்தல்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு சம்பவங்களை அடிப்படையாக கொண்டு இந்த பந்தல்கள் அமைக்கப்படுவது வழக்கம். அந்த வகையில், பாலக்கோட்டில் இந்திய விமானங்கள் தாக்குதல் நடத்தியதை விளக்கும் வகையில் கொல்கத்தாவில் துர்கா பூஜை பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. சர்போஜானின் துர்கா பூஜை கமிட்டியின் 50 ஆண்டு துர்கா பூஜை விழாவையொட்டி இந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.  நுழைவு வாயிலில் இந்திய விமான படை வீரர்கள் போன்று களிமண்ணால் செய்யப்பட்ட 65 மாதிரிகள் வைக்கப்பட்டுள்ளன. மேலும், தப்பி ஓடும் தீவிரவாதிகள் மற்றும் இறந்த தீவிரவாதிகளின் உருவங்களும் இடம் பெற்றுள்ளன. பந்தலின் மேலே இந்திய விமான படை விமானம் வட்டமிடுவது போன்று அமைக்கப்பட்டுள்ளது. இது குறித்து துர்கா பூஜை கமிட்டியின் செய்தி தொடர்பாளர் விக்ராந்த் சிங் கூறுகையில், “50வது ஆண்டு துர்கா பூஜை விழா பந்தலை பார்வையிடும் பார்வையாளர்களுக்கு மீண்டும் அதனை நினைவுகூறுவது போன்று இருக்க வேண்டும் என்பதற்காக பாலக்கோட் விமான படை தாக்குதல் கருத்துருவில் பந்தலை அமைத்துள்ளோம். மேலும் விமான படை விமானிகளின் சாதனைகளை நமது குழந்தைகளுக்கு விளக்கும் வகையிலும் இந்த ஏற்பாட்டை செய்துள்ளோம். பந்தலில் விங் கமாண்டர் அபிநந்தனின் மாதிரி சிலையும் வைக்கப்படுகிறது,” என்றார்.

மூலக்கதை