ஏற்றுமதி - இறக்குமதி ஆகஸ்ட் மாதத்தில் சரிவு

தினமலர்  தினமலர்
ஏற்றுமதி  இறக்குமதி ஆகஸ்ட் மாதத்தில் சரிவு

புதுடில்லி:நாட்டின் ஏற்றுமதி, கடந்த ஆகஸ்ட் மாதத்தில், 6.05 சதவீதம் குறைந்து, 1.86 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது. இறக்குமதியும், 13.45 சதவீதம் குறைந்துள்ளது.


பெட்ரோலியம், பொறியியல், தோல், நவரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள் ஆகிய முக்கிய துறைகளில் ஏற்றுமதி குறைந்துவிட்ட காரணத்தால், கடந்த ஆகஸ்ட் மாதத்தில் நாட்டின் ஏற்றுமதியானது, 6.05 சதவீதம் சரிந்து, 1.86 லட்சம் கோடி ரூபாயாக குறைந்து விட்டது.இதேபோல் இறக்குமதியும், 13.45 சதவீதம் அளவுக்கு சரிவு கண்டு, 2.81 லட்சம் கோடி ரூபாயாக குறைந்துள்ளது.



கடந்த, 2016ம் ஆண்டு, ஆகஸ்ட் மாதத்துக்குப் பின், இது தான் மிக குறைந்த அளவாகும். அப்போது, 14 சதவீத சரிவைக் கண்டது இறக்குமதி.வர்த்தகப் பற்றாக்குறையை பொறுத்தவரை, கடந்த ஆகஸ்ட் மாதத்தில், 95 ஆயிரத்து, 500 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதுவே, கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில், 1.27 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது.


கடந்த ஆகஸ்ட் மாதத்தில், 30 முக்கிய துறைகளில், 22 துறைகளில் வளர்ச்சி குறைந்து காணப் பட்டது.அதேசமயம் இரும்பு தாது, மின்னணு பொருட்கள், மசாலா பொருட்கள் மற்றும் கடல் பொருட்கள் ஆகியவற்றில் நல்ல வளர்ச்சி காணப்பட்டது.இந்த ஆண்டில் இதுவரை நாட்டின் ஏற்றுமதி குறைந்துள்ளது. இது, ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சியில் தாக்கத்தை ஏற்படுத்தும்.



ஒட்டுமொத்தமாக, நடப்பு ஆண்டில், ஏப்ரல் முதல், ஆகஸ்ட் வரையிலான காலகட்டத்தில் ஏற்றுமதி, 1.53 சதவீதம் குறைந்து, 9.48 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது.இறக்குமதியை பொறுத்தவரை, 5.68 சதவீதம் குறைந்து, 14.65 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது.

மூலக்கதை