வீட்டு வசதி, ஏற்றுமதி துறையினருக்கு சலுகைகள் :மத்திய நிதியமைச்சர், நிர்மலா சீதாராமன் அறிவிப்பு

தினமலர்  தினமலர்
வீட்டு வசதி, ஏற்றுமதி துறையினருக்கு சலுகைகள் :மத்திய நிதியமைச்சர், நிர்மலா சீதாராமன் அறிவிப்பு

புதுடில்லி:ஏற்றுமதி மற்றும் வீட்டு வசதி உள்ளிட்ட துறைகளுக்கான சலுகைகளை, மத்திய நிதியமைச்சர், நிர்மலா சீதாராமன் நேற்று அறிவித்தார்.


நாட்டின் பொருளாதார வளர்ச்சியை மேலும் துரிதப்படுத்தும் வகையில், பல்வேறு துறைகளுக்கான சலுகைகள் மற்றும் திட்டங்களை தொடர்ந்து அறிவித்து வருகிறார், மத்திய நிதி அமைச்சர், நிர்மலா சீதாராமன்.இதன் தொடர்ச்சியாக, நேற்றும் பல்வேறு சலுகைகளை அறிவித்தார்.70 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு திட்டங்களை, ஏற்றுமதியாளர்கள் மற்றும் கட்டுமான துறையினருக்கு அறிவித்துள்ளார். இதில், 30 ஆயிரம் கோடி ரூபாய்க்கான இடர்ப்பாட்டு நிதித் திட்டமும் அடக்கம்.நிதியமைச்சரின் முக்கிய அறிவிப்புகள்:


வீட்டு திட்டங்கள்



* சகாய விலை மற்றும் மத்திய தர வருவாய் கொண்டவர்களுக்கான வீடு கட்டும் திட்டங்களை, முழுவதுமாக முடித்துக் கொடுக்க உதவும் வகையில், மத்திய அரசு, 10 ஆயிரம் கோடி ரூபாய் நிதியத்தை ஏற்படுத்தியுள்ளது. இதே அளவுக்கான தொகை, வெளி முதலீட்டாளர்களிடம் இருந்தும் பெறப்படும்.


* இந்த நிதியத்தை, தொழில் வல்லுனர்கள் நிர்வகிப்பர். 60 சதவீதம் வரை கட்டிய கட்டுமான நிறுவனங்களுக்கு, நிதியுதவி நிபந்தனைகளுக்கு உட்பட்டு வழங்கப்படும்


* வீடு கட்டுவதற்கான முன்பணத்துக்கான வட்டி விகிதம் குறைக்கப்பட்டு, 10 ஆண்டு அரசு பத்திரங்களுக்கான வட்டி விகிதத்துக்கு இணையாக இருக்கும். இதன் மூலம், அரசு பணியாளர்கள் புதிய வீடுகள் வாங்குவது அதிகரிக்கும்.


* கட்டுமான நிறுவனங்கள் வெளிநாடுகளிலிருந்து நிதியுதவி பெறும் வகையில், வெளி வணிகக் கடன் வாங்குவதற்கான விதிமுறைகள் தளர்த்தப்படும்.




ஏற்றுமதி



* ஏற்றுமதியாளர்களுக்கான, முன்னுரிமை துறை கடன் திட்டம்திருத்தப்பட்டு, அறிவிக்கப் பட்டு உள்ளது. இதன் மூலம், 36 ஆயிரம் கோடி முதல், 60 ஆயிரம் கோடி ரூபாய் வரை, கூடுதல் ஏற்றுமதி கடன் வழங்கப்படும். மேலும், இந்த ஏற்றுமதிக்கான நிதி, வர்த்தக துறையைச் சேர்ந்த குழுவினரால் தீவிரமாக கண்காணிக்கப்படும்.


* ஏற்றுமதி கடன் காப்பீட்டு திட்டத்தை, ஏற்றுமதி கடன் உத்தரவாத கழகம் மேலும் விரிவுபடுத்தும்.


* பல நாடுகளுடன் கையெழுத்திட்டுள்ள, வர்த்தக உடன்படிக்கைகளின் கீழ், ஏற்றுமதியாளர் களுக்கு சலுகை கட்டணங்களை, உகந்த முறையில் பயன்படுத்த, தடையற்ற வர்த்தக ஒப்பந்த பயன்பாட்டு திட்டம் உருவாக்கப்படும்.

* கைவினைப் பொருட்கள், யோகா, சுற்றுலா, ஜவுளி மற்றும் தோல் போன்ற துறைகளை மையமாகக் கொண்டு, நாட்டின் நான்கு இடங்களில், ‘துபாய் ஷாப்பிங் விழா’ போன்று, ‘மெகா ஷாப்பிங் விழா’க்கள் நடத்தப்படும்.

* ஜி.எஸ்.டி., உள்ளீட்டு வரிப் பயனை பெற, முற்றிலும் தானியங்கி மின்னணு முறை, இந்த மாத இறுதியிலிருந்து பயன்பாட்டுக்கு வருகிறது.


நாட்டின் பணவீக்கம் கட்டுப்பாட்டில் உள்ளது. தொழில் துறையின் மறுமலர்ச்சிக்கான தெளிவான அறிகுறிகள் உள்ளன.


நிர்மலா சீதாராமன்--நிதியமைச்சர்

மூலக்கதை